பரீட்சையின் போது மாணவர்களுக்கு ஏற்படும் மறதியும் அதற்கான தீர்வும்


ஞாபசக்தி அல்லது நினைவாற்றல் எனப்படுவது தான் அனுபவித்த கற்றறிந்த விடயங்களை தேவைப்படும் போது மறுபடியும் நினைவிற்குக் கொண்டு வரும் ஒரு செயற்பாடாகும். நல்ல நினைவாற்றல் பெற்றுள்ள மனிதன் அறிவாற்றல் மிக்கவனாக எண்ணற்ற சாதனைகளையும் நிகழ்த்துபவனாகக் காணப்படுவான்.

நினைவாற்றல் குன்றுவதனால் பல விடயங்களில் தோல்வி ஏற்பட்டு பின் தங்கிவிட நேரிடும். அதுவும் பாடசாலை மாணவர்களுக்கு பரீட்சை நேரத்தில் அவர்களின் நினைவாற்றல் திறன்தான் கைகொடுக்கும்.ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் மறந்து போனாலே பதற்ற நிலை ஏற்படுவதுண்டு, அதேபோல் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றும் ஒருவருக்கும் உரிய நேரத்தில் சரியான பதில் தெரிந்திருந்தும் நினைவாற்றல் குறைவினால் பதில் கூற முடியாது தோல்வி அடைகின்றனர்.

பொதுவாக எல்லோருமே நினைவாற்றல் மனதில்தான்(நெஞ்சில்) பதிந்துள்ளதாக எண்ணுகின்றோம்.மனம், மனச்சாட்சி, நெஞ்சு என முன்வைப்பதெல்லாம் மூளையைத்தான் குறிக்கின்றன. மூளையின் சக்தி என்பது அளவிட முடியாதது. ஒருவர் நூறு ஆண்டுகளில் ஒவ்வொரு வினாடியிலும் ஒரு சில  விடயங்களை நினைவில் சேகரித்துக் கொண்டுதான் இருக்கிறார்.அவ்வளவு விடயங்களையும் அவர் நினைவில் சேகரித்து வைத்தாலும் கூட தனது மூளை செயல்திறனில் பத்தில் ஒரு பங்கை மட்டுமே பயன்படுத்துகிறது. அந்தளவுக்கு திறன் வாய்ந்தது மனித மூளை ஆகும்.  ஒரு விடயத்தை மறக்காமல் இருப்பது மட்டுமல்ல நினைவாற்றல்: மனதில் (மூளையில்) பதியப்பெற்று இருக்கின்ற அறிவில் இருந்து சரியான விவரத்தை தேவைப்படும் நேரத்தில் வெளிப்படுத்தும் திறமைதான் நினைவாற்றல் என்கிறார்கள் விஞ்ஞானிகள்!

ஒரு மாணவனை எடுத்துக்கொண்டால்,பாடங்களை நன்றாகப் படித்துவிட்டு தேர்வுக்குச் செல்கின்றான்.அவன் படித்ததில் இருந்து கேள்விகள் வருகின்றன.ஆனால், தேர்வறையில் இருக்கும் போது பதில் நினைவுக்கு வராமல் வீட்டுக்குச் சென்ற பிறகு நினைவிற்கு வருவதும் உண்டு. பலருக்கும் பல விடயங்கள் நினைவில் இருக்கும். ஆனால், தேவையான நேரத்தில் குறிப்பிட்ட விடயத்தை நினைவிற்குக் கொண்டுவர முடியாமல் தவிப்பார்கள். தேவைப்படும் நேரத்தில் தேவையான செய்தி உடனடியாக நினைவுக்குக் கொண்டுவர முடியாது போதலே ஞாபக மறதி எனலாம்.

மனிதனின் நினைவாற்றலுக்கும் மனதை ஒருநிலைப்படுத்தலுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்;. மனதை எந்தளவுக்கு ஒருமுகப்படுத்தி ஒரு விடயத்தில் கவனம் செலுத்துகிறோமோ அந்த அளவிற்கு அது மனதிலே பதிகின்றது. புhடசாலை மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுவதற்கு முன்னர் முதல் தான் கற்றவற்றை மீட்டல் செய்து மூளையில் பதியப் பெற்றவற்றை புதுப்பித்து ஒருங்கமைப்பதன் மூலமும், நேர்முகப் பரீட்சைக்கு செல்பவர்கள் முக்கியமான விடயங்கள் பற்றி மீட்டல் செய்து  மூளையில் சிதறல்களாக பதியப்பெற்றுள்ளவற்றை மேலே கொண்டு வந்து ஒருமுகமாக பதிவை புதுப்பித்தல் மூலமும்  நினைவாற்றலை ஏற்படுத்திக் கொள்ளலாம். நினைவாற்றலானது இரண்டு வகைகளில் காணப்படுகிறது, அவையாவன குறுகிய கால நினைவாற்றல், நீண்ட கால நினைவாற்றல், ஆகும். எமது மூளையில் அத்தனை தகவல்களும் தொடர்ந்து சேமித்து வைக்கப்படுவதில்லை. அவசியமான காலத்திற்கு மட்டுமே அந்த தகவல்கள் மூளையில் சேமித்து வைக்கப்படுகின்றன. பணி முடிந்ததும் அந்த தகவல்கள் மறக்கப்பட்டு விடுகின்றன. இது குறுகிய கால நினைவாற்றல் எனப்படும்.

எம்முடைய மனதை மிகவும் கவர்ந்தவை அல்லது பாதித்தவை, மீண்டும் மீண்டும் சொல்லிப் பார்த்தவை, நாம் செய்யும் தொழிலுக்கு  தேவையானவை எமது மூளையில் நீண்ட கால நினைவுகளாக பதிந்துவிடுகின்றன. எமது மூளை பல செய்திகளையும் தகவல்களையும் சேர்த்து பாதுகாக்கிறது. பல ஆண்டுகளாக  அந்த தகவல்கள் வெளிக்கொணரப்படாமல் போனால் சேமிக்கப்பட்டுள்ள தகவல்களுக்கிடையில் அவை புதைந்து போகின்றன. நீண்ட கால நினைவுகளில் இருந்து தகவல்களை மீட்டெடுப்பதற்கு மூளை சில வேளை சிரமப்படுவது அதனாலேயாகும்.

நினைவாற்றல் நன்றாக இருப்பதற்கு தன்னம்பிக்கை, ஆர்வம், செயல் ஊக்கம், விழிப்புணர்வு, புரிந்து கொள்ளல், உடல் ஆரோக்கியம் முதலான  மனோநிலைகள் அவசியமாகும். ஞாபக மறதி ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களாக, மூளை நரம்புகளில் ஏற்படும் சிதைவு, போசாக்கின்மை, உற்சாகமின்மை, உடல் அப்பியாசமின்மை, மற்றும் ஆர்வமின்மை, முயற்சியின்மை, தாழ்வு மனப்பான்மை, எதிர்மறை எண்ணம், பயம், அதிர்ச்சி, மனச்சோர்வு, துக்கம், வெறுப்பு போன்ற உணர்ச்சிகளும் மனப்பாதிப்புகள், மன ஒருமையின்மை, கவனக்குறைவு, தப்பிக்கும் மனோபாவம், கடந்த காலச் சிந்தனைகளில் அல்லது எதிர் கால கனவுகளில் மூழ்குதல், புகை, மது போதைப் பழக்கங்கள், உடல்நலக் குறைபாடுகள், உடல் நோய்கள்(குறிப்பாக தொற்றாத வகை நோய்களான – வலிப்பு, இரத்தசோகை, உயர் குறை தைரொய்டு சுரப்பு, மாதவிடாய் நிற்கும் கால ஹார்மோன் பிரச்சினைகள்) என்பன மனிதனின் சிந்திக்கும் திறனை அதிகம் பாதிக்கின்றன.
மனதை ஒரு நிலைப்படுத்துதல், யோகாசனம், தியானம், சமய வழிபாடுகளில் ஈடுபடல், உடற்பயிற்சி,மற்றும் குறுக்கெழுத்து, எண்புதிர், அயல் மொழிகளைக் கற்றல் போன்ற மூளைக்கு  பயிற்சி வழங்கும் செயற்பாடுகள் மூலமும் போசாக்கான உணவு வகைகளை உண்ணுதல், போதியளவு உறக்கமும் ஓய்வும்,உடலுக்குத் தேவையான அளவு நீர் அருந்துதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதன் மூலமாக நினைவாற்றலினை வளர்த்துக் கொள்ளலாம்.

நாம் படிக்கும் தகவல்களை முறைப்படி தொகுக்காவிட்டால் தேவையான போதுவெளியே எடுப்பது கடினமாகும். அதிகளவு கொள்ளளவு கொண்ட மூளையில் தேவையான அளவு தகவல்களைத் திரட்டி பாதுகாப்பாக முறைப்படி மாணவர்கள்; வைப்பதில்லை. ஒரு நூலகத்தில் பல விதமான புத்தகங்கள் உள்ளன. அந்தப் புத்தகங்கள் ஒழுங்கான முறையில் அடுக்கி வைக்கப்படவில்லை. இதனால் நமக்கு வேண்டிய புத்தகத்தை உடனே கண்டுபிடிக்க இயலாது. தேவையான புத்தகத்தை எளிதான முறையில் கண்டுபிடிப்பதற்கு புத்தகப் பட்டியல் அடங்கிய குறிப்பேடும் அவசியம் தேவையாகும். இந்த நூலகம் போலவே நமது மூளையும் ஒரு ஒழுங்கில்லாத நூலகம் ஆகும். தேவையான புத்தகங்களை எளிதில் கண்டுபிடிக்கும் குறிப்பேடு போல மூளையில் குவிந்து கிடக்கும் தகவல்களையும் எளிதில் நினைவில் கொள்ள நமது மூளைக்கி நன்கு பயிற்சி கொடுக்க வேண்டும். குறிப்பிட்ட செய்திகளை நினைவில் கொண்டுவரும் நினைவாற்றல் கலையை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

நினைவாற்றலை வளர்த்துக் கொள்வதற்கு பல வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் தொடர்வு ஏற்படுத்துதல் முறையாகும். பொதுவாக எமது மூளையில் சேமித்து வைத்திருக்கின்ற தகவல்களை புதிதான தகவல்களோடு தொடர்வுபடுத்திப் பார்க்கின்ற பொழுதுதான் நாம் கற்ற பாடம் நினைவில் நிற்கின்றது. மாணவர்கள் தனது அறிவைப் பெருக்குவதற்கு தொடர்வுபடுத்துதல் மிகவும் உறுதுனையாக அமையும்.

நினைவாற்றலை வளர்க்க உதவும் இன்னொரு முறை காட்சிப்படுத்துதல் ஆகும். அதாவது ஐம்புலன்களால் பெறப்பட்ட தகவல்களை அல்லது செய்திகளை காட்சியாக மனதில் உருவாக்கி நினைவில் நிறுத்திக் கொள்வதை இது குறிக்கும்.ஒரு தகவலை நினைவில் வைத்துக் கொள்வதற்கு கற்பனையில் ஒரு காட்சியை உருவாக்கிக் கொள்வது அவசியமாகும். படைப்புத்திறன் மூலம் நினைவில் இந்த முறையை பல மாணவர்கள் தங்களின் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள பயன்படுத்துகின்றனர்.

மேலும் பொருள் உணர்ந்து படித்தல், படிப்பதற்கு தகுந்த சூழலை உருவாக்குதல், படித்த விடயங்களை அடிக்கடி நினைவிற்கு கொண்டு வருதல், படித்த விடயங்களை மனப்பாடம் செய்யாமல் நன்றாக விளங்கிக் கற்றல், படித்த விடயங்களை உடனுக்குடன் மீட்டுப் பார்த்தல் போன்றவற்றின் மூலமாக நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

எனவே ஞாபக மறதி எனும் பலவீனம், இல்லாத மனிதன் உலகில் யாரும் இருக்க முடியாது. குழந்தைகள் முதல் முதியோர் வரை மறதி இல்லாத மனிதர் இல்லை. ஆனால் அது மனிதனுக்கு மனிதன் மறதியின் அளவுகளும், தன்மைகளும், பாதிப்புக்களும் மாறுபடும்.மாணவர்கள் தங்களது நினைவாற்றலை வளர்த்துக் கொள்வதனுடாக சிறந்த கற்றலினை மேற்கொள்ளலாம்.

மு.டயானி
பிள்ளை நலத்துறை
கிழக்குப் பல்கலைக்கழகம்