திருப்பெருந்துறை கொத்துக்குள மாரியம்மன் ஆலயத்தை சூழவுள்ள வயல்காணிகள் நிரப்பப்பட்டு கட்டடங்கள் அமைக்க எதிர்ப்பு


மட்டக்களப்பு  திருப்பெருந்துறை, கொத்துக்குள மாரியம்மன் ஆலய சூழவுள்ள வயல்காணிகள் நிரப்பப்பட்டு, கட்டடங்கள் அமைக்கும் பணிகளை நிறுத்துமாறு கோரி, ஆலய நிர்வாகத்தினரும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்து, ஆலய முன்றிலில், இன்று 10.01.2018  காலை  கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தினர். ஆலயத்தின் அழகையும் புனிதத்தையும் பாதுகாக்கும் பகுதியாக ஆலயத்தைச் சூழவுள்ள வயல் பிரதேசம் காணப்படுகின்றது.

வயல்காணிகளை மூடுவதற்கு அரசாங்கம் தடைகளை விதித்துள்ள போதிலும் அவற்றையும் மீறி, குறித்த வயல்காணி மூடப்பட்டு கட்டடம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ஆலய நிர்வாகத்தினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

2000ஆம் ஆண்டு 46ஆம் இலக்க கமநல அபிவிருத்திச் சட்டத்தின் அடிப்படையில், விவசாயக் காணிகள், விவசாய நடவடிக்கைகள் தவிர்ந்த, ஏனைய நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தமுடியாது என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த காணியை நிரப்புவதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்கியுள்ளதாக,  விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

குறித்த காணி நிரப்பப்படுமானால் அப்பகுதியில் உள்ள ஏனைய விவசாயிகளுக்கும் பாதிப்புகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்விவகாரம் தொடர்பில் 2016ஆம் ஆண்டு அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்றதாகவும் இதுவரையில் கருத்தில் கொள்ளப்படவில்லையெனவும் இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறும், கொத்துக்குளம் மாரியம்மன் ஆலய பரிபாலனசபை தலைவர் எஸ்.ருவிகரன் தெரிவித்தார்.