கல்வி சாதிப்பது என்ன?



'மனிதருக்குள் மறைந்திருக்கும் பூரணத்துவத்தை வெளிக்கொணருவதே கல்வி என்றார்' சுவாமி விவேகானந்தர். சமுதாயம் தான் வினைத்திறனான சான்றோர்களை உருவாக்கி அவர்களை சிறந்த ஒரு குடிமகனாக உருவாக்கி நாட்டுக்கு அளிக்க உதவுவதே கல்வி ஆகும். கல்வி ஒருவனை வளமாக வாழ வைக்கவில்லையானால் அக்  கல்வி  நோக்கமற்றதாகி விடுகிறது. உலகத்திலே மனிதனுக்குக் கிடைக்கக் கூடிய பேறுகளில் எல்லாம் சிறந்த பேறு கல்விப்பேறு தான். அது எல்லாச் செல்வங்களிலும் சிறந்தது. கல்விக் கடவுளான சரஸ்வதியை 'கல்விப் பெருஞ் செல்வப் பேறே சகலகலா வள்ளியே' என்று அழைத்து கல்வி நாளும் வேண்டுகிறார் குமரகுருபரர். கல்வி அறிவு பெற்றவன் சமூகத்தில் உயர்ந்தவனாக அன்றும் இன்றும் கணிக்கப்படுகின்றான். ஒருவனுடைய வாழ்வு வளம் பெற அவனுக்குக் கல்வி அவசியம்.


மனிதன் என்பதற்கு சிந்திக்கும் உயிரி என்பது பொருள். சிந்தனையின் அடிப்படையில் அறிவு பெருக வேண்டும். சிந்திக்கும் திறனே எதையும் தூண்டி, துருவி ஆராயும் பண்பினை அளிக்க வல்லது. இதன் மூலமாக கற்பதற்கான ஆற்றலும் காரண காரிய  தொடர்பு காணும் திறனும் பகுத்தறிவும் வெளிப்படுகின்றன. கல்வியின் பயனுப் பற்றிக் கூறும் அமெரிக்கக் கல்வி உளவியளாளரான  ஜோன் டியூவி என்பவர் கல்வி ஒருவரிடத்தில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ஒருவன் பெறுகின்ற பல்வகைப்பட்ட அனுபவங்களே கல்வி என்றும் கூறுகின்றார். கல்வி என்பது அனுபவங்களை அனுபவங்களால் அனுபவங்களூடாக அளிப்பதாக அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.  இந்த வகையிலே கல்வியை மற்றவர்களுக்கு ஊட்டுவதிலும் வழிகாட்டுதலிலும் ஒரு ஆசிரியரின் பங்குப்பணி மிக முக்கியமானதும் மகத்துவமானதும் ஆகும்.

இன்று சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் உள்ளவர்களும் கல்வியின் அவசியத்தை  உணர்ந்திருக்கிறார்கள். கல்வி இல்லாதவனை நடைப்பிணம் என்று கூறுமளவிற்கு கல்வியின் தேவை வலியுறுத்தப் படுகின்றது. மனிதன் பிறந்ததில் இருந்தே படிப்பின் மூலம் பெறும் அனுபவத்தினால் அறிவு பெறத் தொடங்குகிறான். புதிய விடயங்களை அறிந்து கொள்ளலும் தேடலும் தான் கல்வி ஆகும். எனவே ஒருவனிடத்து பொதிந்திருக்கும் அறிவை கல்வியானது விருத்தியாக்குகின்றது என்பதே பெரியவர்கள் கண்ட உண்மை ஆகவே இயல்பான எம் அறிவை தூண்டும் கல்வியை நாம் தேடிப் பெற்றுக்கொள்ளல் அவசியம்.
திருவள்ளுவர் பெரும் கல்வியைப் பற்றி பல்வேறு குறல்களினாலும் கூறியிருக்கிறார். கல்வியே  ஒருவனின் மூலதனம் எனக் கூறுகின்றார்.

கல்விக்கு ஒருவனை இந்த வையகத்தில் வாழ்வாங்கு வாழ வழி காட்டுகின்றது.  கல்வியின் பேறு ஒருவனை கற்றபடி நடக்க வைக்க வேண்டும்.  கல்வியினால் நம் ஒழுக்கம் உயர்வு பெற வேண்டும். ' கற்க' என்று கல்வியினைத் தேட வலியுறுத்தும் வள்ளுவர் ' கற்றபின் நிற்க அதற்குத் தக' என்று கூறுவதன் மூலம் கற்றவர்கள் பண்பாடாக வாழ வேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்துகின்றார். ' யாதாயினும்  நாடாமல் உலராமல் என்னொருவன் சாத்துணையும் இல்லாதவாறு' என்று திருவள்ளுவர் கூறிய பொன் மொழியாகும்.

கல்வியின் பங்குப்பணியை சந்தித்த நாம் எம் அறிவைச் செழிமையுடையதாக்க பொருத்தமான ஆசிரியரிடம் இருந்தும் பொருத்தமான இடங்களில் இருந்து அறிவைச் செழிமையாக்க கல்வியைத் தேடித் தேடிப் பெற வேண்டும். ஐயம் திரியறக் கற்க வேண்டும். கற்றல் வேறு கற்றபடி நடத்தல் வேறு. கற்றவரெல்லாம் நல்லொழுக்க   சீலர்களாகவோ, கற்றவற்றின் படி வாழ்வில் ஒழுகுபவர்களாகவோ இருப்பதே நல்லது.  சுருக்க நோக்கினால் கல்வியால் சாதிக்கக் கூடியது மனிதரின் நடத்தையில் மாற்றத்தை ஏற்படுத்துவதே ஆகும். கல்வியின் விளைவு மனிதரின் நடத்தை மாற்றமே.

E.F.Daisy Melani
Education & Child Care

EUSL.