கடந்த ஆட்சியின் பாவச்சுமைகளை எதிர்கால சந்ததியினருக்கு விட்டு வைக்கமாட்டேன்

மஹிந்த அரசாங்கத்தின் பாவங்களால் கடனாளிகளாக மாறியுள்ள இந்நாட்டின் எதிர்கால சந்ததியினரை கடன் சுமையிலிருந்து விடுவித்து அவர்களுக்கு பாதுகாப்பானதொரு எதிர்காலத்தை அமைத்துக்கொடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சி கண்டி நகரின் வர்த்தக நிலையத் தொகுதிக்கு முன்பாக தேசிய மட்டத்திலான தேர்தல் பிரசார நடவடிக்கைகளை நேற்று முன்தினம் (18) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது. இந்தத் தேர்தல் பிரசாரக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டில் பல்வேறு விடயங்களை இல்லாமல் செய்தார். இளைஞர்களின் எதிர்பார்ப்புகளையும் இல்லாமல் செய்தார். பொருளாதாரம் சரிவடைந்தது. நாம் ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத்தேர்தலையும் வெற்றிகொண்டு கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறிய அரசாங்கமொன்றையே பொறுப்பேற்றோம். ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவிருந்த திகதிக்கு 2 வருடங்களுக்கு முன்னரே மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலை நடாத்தினார்.

கடனைச் செலுத்துவதற்கு நாட்டின் வருமானம் போதாமல் உள்ளது. ஆறேழு வருடங்களாக கடனைப்பெற்று அந்தக் கடனை திருப்பிச்செலுத்த முடியாத ஒரு கட்டத்திற்கு வந்தார்கள். பொருளாதாரம் சரிந்துவிழ முன்னர் அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள முயற்சித்தார். அவரது அதிகாரம் இல்லாமல் போனது. பொருளாதாரத்தை முகாமைசெய்ய முடியாமல் தேர்தலை நடாத்தினார்.

முதலில் பொருளாதாரத்தை சரிசெய்துகொள்ளவே நாம் இப்பொறுப்பை ஏற்றோம். கடனைச் செலுத்த முடியாதிருந்த பொருளாதாரத்தை கடனைச் செலுத்த முடியுமான மட்டத்திற்கு கொண்டுவந்துள்ளோம். பொருளாதாரம் வலுவடைந்துள்ளது. அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தோம். எங்களுக்கு முடியுமான அளவில் பொருட்களின் விலையை குறைத்தோம். தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுத்தோம். வீடுகளை நிர்மாணித்து வருகின்றோம். பாடசாலைகளுக்கு புதிய கட்டிடங்களை பெற்றுக்கொடுத்துள்ளோம்.

மருந்துப்பொருட்களின விலையை குறைத்தோம். 2015 காலப்பகுதியையும் விட தற்பொழுது நல்லதொரு நிலையை ஏற்படுத்தியுள்ளோம். கடந்த மஹிந்த அரசாங்கத்தின் பாவங்களால் கடனாளிகளாக மாறியுள்ள இந்நாட்டின் எதிர்கால சந்ததியினரை கடன் சுமையிலிருந்து விடுவித்து அவர்களுககு பாதுகாப்பானதொரு எதிர்காலத்தை அமைத்துக்கொடுப்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளதென தெரிவித்தார்.