அப்போது மௌனித்துவிட்டு தற்போது இணைப்பு பற்றி பேசுகின்றனர்: துரைரட்னம் சாடல்

வடக்கு கிழக்கு பிரிக்கப்பட்ட போது அதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாதவர்கள், வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி பேச முற்படுகிறார்கள் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரட்னம் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் அலுவலகத்தை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி விலக வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள ஒரு சிலரே பொறுப்பேற்க வேண்டும்.

கடந்த காலத்தில் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு இலங்கைத் தமிழரசுக் கடசி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ் விடுதலைக் கழகம் என நான்கு கட்சிகள் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்தியிருந்தோம்.

வடக்கு கிழக்கில் வாழ்கின்ற மக்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்பதற்காக நாம் பல உயிர்களை தியாகம் செய்தோம். பல சொத்துக்களை இழந்துள்ளோம். வடக்கு கிழக்கு நிரந்தரமாக இணைக்கப்பட வேண்டும். பறிக்க முடியாத சுயாட்சி அமுல்ப்படுத்த வேண்டும். போர்க்குற்ற விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என பலதரப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலத்தில் நாடாளுமன்ற தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளிட்டது. அதனடிப்படையில் நாங்கள் மக்களின் ஆணையைப் பெற்றோம்.

இவ்வாறிருக்கையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஒரு சிலரது பேச்சுக்களை கேட்டு இலங்கை அரசாங்கத்திற்கு விலைபோயுள்ளது. தேர்தலில் விஞ்ஞாபனத்தில் எம்மால் முன்வைக்கப்பட்ட சர்வதேச விசாரணை, சர்வதேச நீதி ஆணைக்குழுவின் செயற்பாடுகள், இடைக்கால அறிக்கை தொடர்பாக எம்மால் முன்வைக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு கொழும்பை மையமாக் கொண்ட ஈழ போராட்ட வரலாற்றில் எவ்வித அர்ப்பணிப்பும் செய்யாதவர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியை கையிலெடுத்துக் கொண்டு இலங்கை அரசாங்கத்திற்கு விலை போய் அரசாங்கத்தின் அடிவருடிகளாக செயற்படத் தொடங்கியுள்ளனர்” என்றார்.