சேற்றை வாரியிறைக்கும் தேர்தல் பிரசார மேடைகள் ! பகைமையும் விரோதமுமே அதிகம் தென்படுகின்றன

உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரங்களில் பகைமையும் விரோதமுமே அதிகம் தென்படுகின்றன. அரசியல் கடசிகள் தேர்தல் பிரசாரங்களின் போது, தத்தமது கொள்கைத் திட்டங்களை முன்வைக்கின்ற நாகரிக அரசியல் கலாசாரத்தை மேற்குலக நாடுகளிலேயே பெரும்பாலும் அவதானிக்க முடியும்.

அந்நாடுகளில் கட்சிகளெல்லாம் ஒன்றையொன்று வெளிப்படையாக காரசாரமாகத் தாக்குவதில்லை. அரசியல்வாதிகளும் ஒருவர் மீது ஒருவர் அநாகரிகமாக வசைபாடுவதில்லை. தமக்கு எதிரான கட்சியின் கொள்கைகளை ஒரேயொரு வார்த்தையில் கண்டித்து விடுவதுடன் காரியம் முடிந்து விடும். ஒவ்வொரு கட்சியும் தத்தமது எதிர்காலக் கொள்கைத் திட்டங்களை மக்களிடம் முன்வைப்பதிலேயே கரிசனை காட்டுவதுண்டு. இதுவே மேற்குலக நாடுகளின் பொதுவான அரசியல் கலாசாரம் ஆகும்.

எமது நாட்டின் அரசியல் கலாசாரம் முற்றிலும் வேறுபட்டிருக்கின்றது. அரசியல்வாதிகள் தங்களுக்கு எதிரான கட்சிகள் மீது தாராளமாக சேற்றை வாரியிறைக்க முடியும். எதிராளியான அரசியல்வாதியை தனிப்பட்ட முறையில் தாராளமாகத் தாக்க முடியும். அவரது அந்தரங்கம் சம்பந்தப்பட்ட விடயங்களையும் மேடை போட்டுப் பேச முடியும். அந்தரங்க விடயங்களை மேடையிட்டுப் பேசுவது அநாகரிகமானதென்றோ, அப்பேச்சு அவரது தனிப்பட்ட வாழ்வைப் பாதிக்குமென்றோ அரசியல்வாதிகள் ஒருபோதும் கவனம் கொள்வதில்லை.

பொதுவாகக் கூறுவதானால், எமது அரசியல்வாதிகளில் பெருமளவானோர் தத்தமது அரசியல் எதிரியைத் தாக்குவதற்காகவே தேர்தல் பிரசார மேடைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதுவே எமது நாட்டின் அரசியல் கலாசாரமாக மாறியிருக்கின்றது.

இன்றைய உள்ளூராட்சித் தேர்தல் களமும் இவ்வாறுதான் இருக்கின்றது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாத்திரமின்றி, சாதாரண வேட்பாளர்களும் தங்களது அரசியல் எதிரிகள் மீது அவதூறான குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் பிரசாரங்களிலேயே ஈடுபட்டிருக்கின்றனர். எதுவித ஆதாரங்களுமின்றி மோசமான குற்றச்சாட்டுகளையெல்லாம் சுமத்துகின்றனர்.

தமிழ், முஸ்லிம், சிங்கள அரசியல் களங்களில் இதுபோன்ற அநாகரிக அரசியல் பிரசாரங்களை இப்போது தாராளமாகவே காண முடிகின்றது.

தனது அரசியல் எதிராளி மீது குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு எதுவித ஆதாரங்களும் தேவையில்லை. குற்றச்சாட்டை முன்வைத்தால் மட்டும் போதுமானது. அதனை முழுமையாக நம்புவதற்கென்று அப்பாவிகளான மக்கள் கூட்டமொன்று தயாராகவே இருக்கின்றது. மக்களின் பாமரத்தனத்திலேயே அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்த வேண்டியிருக்கிறது.

தென்னிலங்கை பெரும்பான்மை அரசியல் களமும் மிகவும் சூடாகியிருக்கின்றது. புதிய அரசியலமைப்பு ஊடாக நாட்டைப் பிரித்து தமிழர்களின் கையில் ஒப்படைக்கப் போவதாக அரசுக்கு எதிரான அரசியல் சக்திகள் வாய்கூசாமல் பிரசாரம் செய்கின்றன. சிங்கள மக்களுக்கு எவ்வாறு உணர்ச்சியூட்ட வேண்டுமென்ற வித்தை தெரிந்தவர்கள் அவர்கள். இவ்வாறான பிரசாரத்தை முறியடிப்பதோ அல்லது மக்களுக்கு உண்மை நிலைமையைத் தெளிவுபடுத்துவதோ ஆளும் தரப்புக்கு இலகுவான காரியமல்ல.

இதுபோன்று வடக்கு- கிழக்கு தமிழ் அரசியல் பரப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைமைக்கு எதிராக அதன் எதிரணிகள் கண்டனப் போர் தொடுத்திருக்கின்றன. தமிழ் மக்களின் ஆணையை மீறி, அரசுக்கு பக்கபலமாக இயங்குவதாக தமிழ்க் கூட்டமைப்பு மீது பாரிய கண்டனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

இது போன்றதொரு பாரதூரமான எதிர்ப்பிரசாரத்தையே கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தற்போது எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது.

வடக்கு- கிழக்கில் தமிழர்களும் முஸ்லிம்களும் புரிந்துணர்வுக்கும் இணக்கப்பாட்டுக்கும் வராமல் எக்காலத்திலும் அரசியல் தீர்வொன்று ஏற்பட்டு விடப் போவதில்லையென்ற யதார்த்தத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் போன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் நன்கு புரிந்து கொண்டிருக்கின்றது. எனவேதான் தமிழ் அரசியல் தலைமைகளுடன் மனம் விட்டுப் பேசி தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்புடையதான நிரந்தரமான அரசியல் தீர்வொன்றைப் பெற்று விட வேண்டுமென்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முனைப்புடன் நிற்கின்றது.

எனினும் முஸ்லிம் காங்கிரஸின் இவ்விதமான நல்லிணக்கக் கொள்கைதான் இன்றைய அரசியல் களத்தில் அதற்கு எதிராகத் திரும்பியிருக்கின்றது. முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளை முஸ்லிம் காங்கிரஸ் அடகு வைத்து விட்டதாக அதன் அரசியல் எதிராளிகள் பிரசாரத்தில் இறங்கியிருக்கின்றனர்.

இலங்கையின் தேர்தல் களம் இவ்விதமான கண்டனப் பிரசாரங்களாலேயே இப்போது பரபரப்பாகியிருக்கின்றது. தேர்தல் பிரசாரமென்பது எதையும், எவரும் பேசலாம் என்றபடி ஆகியிருக்கின்றது.

இதனை ஆரோக்கியமான, நாகரிகமான அரசியல் கலாசாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. அரசியல் பாதையில் நேர்மையும் நாகரிகமும் அவசியம். அரசியல் கட்சிகள் நேர்மையைக் கடைப்பிடிக்காதவரை மக்களிடம் அதனை எவ்வாறு எதிர்பார்க்க முடியும்?