அரச மருத்துவர்களின் தார்மிகப் பொறுப்பு ! எடுத்ததற்கெல்லாம் அப்பாவி நோயாளர்கள் பணயக் கைதி

இலங்கையில் ஏழெட்டு தசாப்தங்களாக இலவச சுகாதார சேவை நடைமுறையில் உள்ளது. அதுவும் இந்நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட சேவையே இது. இச்சேவை சுதந்திரத்திற்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று என்ற போதிலும், அது நாட்டு மக்களுக்கு பல்வேறு விதத்திலும் நன்மை பயக்கக் கூடிய சேவை என்பதால் நாடு சுதந்திரம் பெற்றுக் கொண்ட பின்னரு-ம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் பயனாக இந்நாட்டினரின் ஆயுட்காலம், தாய், சேய் மரண வீதத்தின் வீழ்ச்சி என்பன வளர்ச்சியடைந்த நாடுகளின் மட்டத்தில் காணப்படுகின்றன. அதேநேரம் போலியோ, டிப்தீரியா, யானைக்கால் நோய், மலேரியா போன்ற நோய்கள் அற்ற நாடாகவும் இந்நாடு திகழுகின்றது. அதுவும் தென்னாசியப் பிராந்தியத்தில் போலியோ நோயை ஒழித்த முதலாவது நாடு என்ற பெருமையையும் இந்நாடு ஏற்கனவே பெற்று இருக்கின்றது. அத்தோடு தென்னாசியப் பிராந்தியத்தில் சிறந்த இலவச சுகாதார சேவை வழங்கும் நாடாகவும் இலங்கை திகழுகின்றது.

மேலும் இவ்விலவச சுகாதார சேவையைத் தொடர்ந்தும் முன்னெடுக்கவும், மேம்படுத்தவும், தேவையான பல்வேறு நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இதன் நிமித்தம் கோடிக்கணக்கான ரூபாய்களை வருடா வருடம் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக ஒதுக்கீடு செய்கின்றது. இதன் மூலம் சுகாதாரத் துறையின் உட்கட்டமைப்பு வசதிகள் முன்னொரு போதுமே இல்லாத முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றது. இருப்பினும் மேம்பாட்டு வேலைத் திட்டங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்வாறு பல மட்டங்களிலும் முன்னேற்றங்களைக் கண்டு தொடர்ந்தும் மேம்பாடு அடைந்து வரும் அரசாங்க சுகாதார சேவையில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினரின் அண்மைக்கால செயற்பாடுகள் இச்சேவையைப் பாதித்து விடுமோ என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

ஏனெனில் இச்சங்கத்தினர் எடுத்ததற்கெல்லாம் அப்பாவி நோயாளர்களை பணயக் கைதிகளாகப் பிடித்துக் கொள்வதே இதற்கான அடிப்படைக் காரணமாகும். அது தான் வேலைநிறுத்தம் ஆகும்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் தம் சம்பள உயர்வு, பதவி உயர்வு, தொலைபேசிக் கட்டணக் கொடுப்பனவு, வாகன அனுமதிப் பத்திரம் மாத்திரமல்லாமல் தம் பிள்ளைகளை முன்னணிப் பாடசாலைகளில் சேர்த்துக் கொள்வதற்காகவும் கூட அப்பாவி நோயாளர்களைப் பணயக் கைதிகளாக்கும் வேலைநிறுத்தத்தை ஒரு ஆயுதமாகப் பாவிக்கின்றனர்.

இவர்களது வேலைநிறுத்தங்களின் விளைவாக அப்பாவி நோயாளர்கள் பல்வேறுவிதமான நெருக்கடிகளுக்கும், அசௌகரியங்களுக்கும் முகம் கொடுக்கின்றனர். குறிப்பாக அப்பாவி நோயாளர்கள் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் காலப்பகுதியில் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவுகளிலும் கிளினிக்குகளிலும் சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியாத நிலையை எதிர்நோக்குகின்றனர். ஆனால் இப்பிரிவுகளில் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக அதிகாலையில் மூன்று நான்கு மணிக்கே வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்து காத்திருந்து இலக்கச் சீட்டுக்களைப் பெற்றுக் கொண்டால்தான் நோயாளர்கள் காலை 8.00 மணிக்கு பிறகு மருத்துவர்களைச் சந்திக்கக் கூடியதாக இருக்கும்.

இவ்வாறான சூழலில் வேலைநிறுத்தக் காலப்பகுதியில் நோயாளர்கள் எவ்வளவு அசௌகரிய நிலைமைக்கு மு-கம் கொடுக்கின்றனர் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. அதேநேரம் வேலைநிறுத்தத்தை அறியாது சிகிச்சை பெற வந்துள்ள நோயாளர்களுக்காவது கூட மனிதாபிமான அடிப்படையில் சிகிச்சை அளிக்க வெளிநோயாளர் பிரிவுகளிலும், கிளினிக்குகளிலும் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முன் வருவதில்லை. மருத்துவர் வேலைநிறுத்தம் என்றால் அரசாங்க வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் நோயாளர்கள் சிக்சிசையை எதிர்பார்க்கவே முடியாது என்றபடி நிலைமை தோற்றம் பெற்று இருக்கின்றது.

இவை இவ்வாறிருக்க, அப்பாவி நோயாளர்களைப் பணயக் கைதிகளாக்கி மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதால் ஏற்கனவே திகதி நிர்ணயிக்கப்பட்ட சத்திரசிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளும் கூட மேலும் கால தாமதப்படுத்தப்படுகின்றன.

இவ்வாறு இந்நாட்டு இலவச சுகாதார சேவைக்கு பெரும் அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் அவ்வப்போது வேலைநிறுத்தங்களை முன்னெடுத்துவரும் மருத்துவ அதிகாரிகள் அண்மைக் காலமாக சைற்றம் தனியார் மருத்துவ கல்லூரி விவகாரத்திற்கும் கூட அப்பாவி நோயாளர்களைப் பணயக் கைதிகளாக்கி கொள்கின்றனர். சைற்றம் விவகாரம் தொடர்பில் மருத்துவர்களும், பல்கலைக்கழக மாணவர்களும் முன்வைக்கின்ற கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றி வருகின்றது. இருந்தும் கோரி-க்கைகள் புதிதுபுதிதாக தோன்றிய வண்ணமே உள்ளன.

இவ்வாறான நிலையில் சைற்றத்தை இரத்து செய்வது தொடர்பில் அரசாங்கம் தன் நிலைப்பாட்டை அறிவிக்காவிட்டால் இம்மாதம் 22 ஆம் திகதிக்கு பின்னர் முன்னறிவித்தல் இன்றி வேலைநிறுத்தத்திற்கு செல்லப் போவதாக நேற்றுமுன்தினம் இச்சங்கத்தினர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புதல் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கா, 'இந்நாட்டில் இயங்கும் பாரிய மாபியாக்களில் ஒன்றாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் செயற்படுவதாகக் குறிப்பிட்டிருக்கின்றார்.

அரசாங்க மருத்துவ அதிகாரிகளின் செயற்பாடுகள் தான் இவ்வாறு விழிக்க வேண்டிய நிலைமையைத் தோற்றுவித்திருக்கின்றது. ஆனால் அவர்கள் அந்த நிலைமையை மாற்றிக் கொள்வதோடு தம் தேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக அப்பாவி நோயாளர்களை பணயக் கைதிகளாகப் பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்பதே நாட்டு மக்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆகவே மக்களின் வரிப்பணத்திலான இலவசக் கல்வி மூலம் கற்று மருத்துவராகியுள்ள அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மக்களின் எதிர்பார்ப்பை மதித்து நடக்க வேண்டும். அது அவர்களது தார்மிகப் பொறுப்பாகும்.