அரசின் தற்போ​தைய நிலை குறித்து சபாநாயகர் இன்று அறிவிப்பு

தேசிய அரசாங்கத்தின் இரண்டு வருட ஒப்பந்தக் காலம் முடிவடைந்திருக்கும் நிலையில் அதன் தற்போதைய நிலைமை தொடர்பாக இன்று முடிவை அறிவிப்பதாக சபாநாயகர் கருஜயசூரிய நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.இரு கட்சிகளுக்குமிடையிலான ஒப்பந்தம் நீடிக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது தொடர்பாக தனக்கு எந்த அறிவிப்பும் கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

தேசிய அரசாங்கம் அமைப்பதற்காக செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதால் அமைச்சர் தொகை குறைக்கப்பட வேண்டும் எனவும் தேசிய அரசாங்கம் நீடிக்க பாராளுமன்ற அனுமதி பெற வேண்டும் எனவும் மஹிந்த ஆதரவு அணியும் ஜே.வி.பியும் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தன. இதற்குப் பதிலளித்த போதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதேவேளை தேசிய அரசாங்கத்தில் இருந்து எந்தத் தரப்பும் விலகவில்லை எனவும் தொடந்து இருப்பதால் இந்தப் பிரச்சினை எழாது எனவும் சபை முதல்வர் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் கரு ஜெயசூரியவின் தலைமையில் நடைபெற்றது.

தினப் பணிகளைத் தொடர்ந்து தேசிய அரசாங்கம் தொடர்பில் எதிர்த்தரப்பு பிரதம கொரடா அநுரகுமார திசாநாயக்க கேள்வி எழுப்பியிருந்தார்.இது தொடர்பில் ஆளும் தரப்பு எதிர்த்தரப்பு எம்.பிகள் பலரும் கருத்து வெளியிட்டிருந்தார்கள்.

இங்கு கருத்து வெளியிட்ட அநுரகுமார திசாநாயக்க எம்.பி.,

இரு கட்சிகள் இணைந்து உருவாக்கிய தேசிய அரசாங்கம் தொடர்பில் எழுந்துள்ள அரசியலமைப்பு ரீதியான பிரச்சினை குறித்து நாம் பல தடவை அரசாங்கத்திடம் வினவினாலும் இது வரை உரிய பதில் கிடைக்கவில்லை. 19 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அமைச்சர் தொகையை 30 விட அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டது. 2 வருடங்களுக்கே தேசிய அரசாங்கம் உருவாக்கப்படுவதாகவும் அதன்பின்னர் நீடிப்பதானால் பாராளுமன்றத்திற்கு அறிவிப்பதாகவும் ஐ.ம.சு.மு செயலாளராக இருந்த விஷ்வ வர்ணபால அறிவித்திருந்தார். 2 வருட காலம் நிறைவடைந்துள்ளது. மீள இதனை நீடிக்க பாராளுமன்ற அனுமதி பெறப்பட வேண்டும்.

2 வருட ஒப்பந்தம் நிறைவடைந்துள்ளதால் அமைச்சர் தொகை குறைவடைய அமைச்சர்கள் பலர் இருக்கிறார்கள்.அவர்கள் பாராளுமன்றத்தில் வழங்கும் பதில்களையும் ஏற்க முடியாது.உச்ச நீதிமன்றத்திற்கு சென்றால் இவ்வாறான அமைச்சர்கள் எடுத்த சகல முடிவுகளும் செல்லுபடியற்றதாகும் என்றார்

டளஸ் அலஹப்பெரும எம்.பி

இந்த அரசாங்கத்தில் சட்டபூர்வமற்ற 24 அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க, பிரதி அமைச்சர்கள் இருக்கிறார்கள். இவர்கள் காலாவதியானவர்கள். நாட்டில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்றார்.

சபை முதல்வர் லக்‌ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்ட போது தேசிய அரசில் உள்ள எந்த தரப்பும் விலகவில்லை என்றார்.

அநுர குமார திசாநாயக்க, 2 வருடத்தின் பின்னரும் ஒப்பந்தத்தை நீடிக்க முடிவு செய்திருந்தால் அதனை சபாநாயகருக்கு அறிவிக்க வேண்டும் என்றார்.

வாசுதேவ நாணயக்கார எம்.பி

தேசிய அரசாங்கம் நீடிக்க பாராளுமன்றம் அனுமதித்திருந்த காலம் முடிவடைந்துள்ளது. பாராளுமன்றம் தான் அமைச்சர் தொகையை முடிவு செய்யும் பாராளுமன்றத்தின் அதிகாரம் மீறப்பட்டுள்ளது.

டளஸ் அலஹப்பெரும எம்.பி

2 வருடங்கள் தேசிய அரசாங்கம் இருக்கும் என ஐ.ம.சு.மு செயலாளர் விஷ்வ வர்ணபால எழுத்து மூலம் பாராளுமன்றத்திற்கு அறிவித்திருந்தார். இந்த காலம் நிறைவடைந்து ஒருமாதமும் 20 நாட்கள் கடந்து விட்டன என்றார்.

ஒப்பந்த காலம் நீடிக்கப்பட்டது தொடர்பில் தனக்கு அறிவிக்கப்படவில்லை என சபாநாயகர் குறிப்பிட்டார்.

தினேஷ் குணவர்தன எம்.பி

தேசிய அரசாங்கம் நீடிப்பதற்கு பாராளுமன்ற அனுமதி தேவை.இல்லாவிட்டால் அமைச்சர் தொகை 30 ஆக குறைக்கப்பட வேண்டும் என்றார்.