இப்போது இருக்கின்ற இந்த தேசிய அரசு ஒரு உறுதிப்பாடான நிலைக்கு வந்தால் தான் இந்த நாட்டிற்கு விடிவு -கி.துரைராசசிங்கம்


இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முற்றுமுழுதாக தமிழ் மக்களுக்கு முற்றிலும் எதிரான துவேசத்தை வீசித்தான் தெற்கு பிரதேசங்களில் இவ்வாறான முடிவுகள் வந்திருக்கின்றது. அரசியல் உறுதிப்பாடு இல்லாவிட்டால் நிச்சயமாக அந்த நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியாது. இப்போது இருக்கின்ற இந்த தேசிய அரசு ஒரு உறுதிப்பாடான நிலைக்கு வந்தால் தான் இந்த நாட்டிற்கு விடிவு இருக்கும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

நேற்றைய  தினம் கனேடிய தமிழர் மனிதாபிமான சங்கத்தின் நிதியின் மூலம் அமைக்கப்படும் கதிரவெளி பாலர் பாடசாலை புதிய கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த நாட்டிலே முன்பெல்லாம் மனிதம் மதிக்கப்படவில்லை மிதிக்கப்பட்டது. அதன் காரணமாக தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தினால் வெளிநாடட்டிற்குச் சென்றவர்கள் தான் எமது புலம் பெயர் உறவுகள். அங்கு அவர்கள் காலநிலையைப் பொருத்தவரையில் மிகக் கடினமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள்.

அவ்வாறான புலம்பெயர் அன்பர்கள் எமது மக்கள் தொடர்பாக எண்ணமுள்ளவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அவர்கள் பல்வேறு விதமான வழிமுறைகளைக் கையாண்டு இங்கு வாழுகின்ற எங்களுக்காக நிதி சேகரித்து. இங்கு அவர்கள் செயற்படுத்தக் கூடிய விதத்திலேயானவர்களை அடையாளம் கண்டு அதனை செய்துகொண்டிருப்பது முக்கிய விடயமாகும்.

கடந்த காலங்களில் பல புலம்பெயர் உறவுகளின் உதவிகள் விணடிக்கப்பட்டிருக்கின்றன. எனவே சரியானவர்களை அவர்கள் இனங்கண்டு அவர்களிடம் அதைக் கொடுத்து தங்களின் இலக்கை அடைந்து கொள்ள வேண்டும். அந்த வகையில் கனேடிய தமிழர் மனிதாபிமான சங்கத்தினால் இப்பாலர் பாடசாலை கட்டிடம் அமைக்கும் செயற்பாடு மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

வடகிழக்கு மாகாணங்களை எடுத்துக் கொண்டால் கிழக்கு மாகாணத்தில் தான் முன்பள்ளிகள் முழுமையாக கல்வித் திணைக்களத்திற்குள்ளே உள்வாங்கப்பட்டிருக்கின்றது. வடமாகாணத்தில் குறித்த சில முன்பள்ளிகள் இன்னும் இராணுவத்தினருடைய நிருவாகத்தின் கீழ் இருக்கின்ற விடயம் முன்பள்ளி தொடர்பில் பரிசீலிக்கப்படுகின்ற போது அவதானிக்கப்படக் கூடியதாக இருக்கின்றது.

அரசாங்கத்தின் திட்டத்திலே 04 வயதில் இருந்து பிள்ளைகளை முறைமையான கல்விக்கு இட்டுச் செல்லுகின்ற திட்டத்தினை அண்மையில் கல்வி அமைச்சர் வெளியிட்டிருந்தார். அவ்வாறு பாக்கப்போனால் இனி 03 வயதுக் குழந்தைகளை மட்டும் நிருவகிக்கின்ற பாடசாலைகளாக முன்பள்ளிப் பாடசாலைகள் இருக்கலாம் என கருதப்படுகின்றது.

முன்பள்ளிப் பாடசாலைகளும் கல்வித் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்குள் கொண்டு வர வேண்டிய முக்கியத்துவம் இருக்கின்றது. முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவுகளைப் பற்றி பார்க்கின்ற போது 2015ம் ஆண்டின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து உருவாக்கிய மாகாண நிருவாகம் தான் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சிறிய கொடுப்பனவொன்றை உருவாக்கி வழங்கியிருக்கின்றது. அது போதுமானதாக இல்லாமல் இருந்த போதிலும் கிழக்கு மாகாணத்தின் நிதி நிலைமைகளைப் பொருத்தவரையில் இது பெரியதொரு விடயமாகவே கொள்ளப்பட வேண்டும்.

இவற்றையெல்லாம் சீர் செய்யப்பட வேண்டும் என்றால் நாட்டினுடைய அரசியல் நிலைமையில் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும். அவ்வாறான மாற்றம் ஏற்படும் என்று நாங்கள் எல்லாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பெரிய குழப்பங்களைத் தோற்றுவித்துள்ளது.

சட்டத்திலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு கூட இந்த உள்ளுராட்சி மன்றங்களை அமைத்துக் கொள்ள முடியாதபடி பலவிதமான சிக்கல்கள் எற்பட்டிருக்கின்றன. தேர்தல் முறை ஒரு கலப்பு முறையாக வந்து அது எங்குபோய் முடியப் போகின்றது என்று கூற முடியாத வகையில் சபைகள் எல்லாம் குழம்பிப் போய் இருக்கின்றது. இது வரையிலே ஒரு சபையையும் அமைக்க முடியாத வகையில் தான் இந்த முடிவுகள் இருக்கின்றது. இதனால் அரச நிர்வாகத்தில் மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. இது சீர் செய்யப்பட வேண்டும்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு அரசியல் உறுதிப்பாடு, ஸ்திரத் தண்மை மிகவும் முக்கியமானது. அந்த உறுதிப்பாடு இல்லாவிட்டால் நிச்சயமாக அந்த நாடு பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண முடியாது. எனவே தான் இப்போது இருக்கின்ற இந்த தேசிய அரசு ஒரு உறுதிப்பாடான நிலைக்கு வந்தால் தான் இந்த நாட்டிற்கு விடிவு இருக்கும். இந்த நாட்டினுடைய துர்ப்பாக்கியம் என்னவென்றால் இன விவகாரங்களை தங்களுடைய அரசியல் மூலதனமாகக் கொண்டு இந்த நாட்டிலே அரசியல் செய்து கொண்டிருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் தான் இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் முற்றுமுழுதாக தமிழ் மக்களுக்கு முற்றிலும் எதிரான துவேசத்தை வீசித்தான் தெற்கு பிரதேசங்களில் இவ்வாறான முடிவுகள் வந்திருக்கின்றது. இது இந்த நாட்டிற்கு பொருத்தமானதாக இருக்க முடியாது என்று தெரிவித்தார்.