மாணவர்கள் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலிருந்து விலகிச் செல்கின்றார்கள்

( -க.விஜயரெத்தினம்)
கீழத்தேய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஆய்வாளர்களின் கள ஆய்வுகளின்படி மாணவர்கள் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளிலிருந்து விலகிச் செல்கின்றார்கள்.இதனால் சமூகத்தில் ஆளுமையுள்ள,வினைத்திறன்மிக்க மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியாமல் போயுள்ளது.ஆளுமைமிக்க, வினைத்திறன் மிக்க சமுதாயத்தை உருவாக்குவதற்கு கல்வி கற்கும் மாணவப்பருவங்களிலே ஒவ்வொரு மாணவர்களும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் கட்டாயமாக ஈடுபட வேண்டும்.இவ்வாறான இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் ஒவ்வொரு மாணவர்களும் பங்குபற்றி வெற்றியடையும் போது சமூகம் எதிர்பார்க்கும் ஆளுமையுள்ள மாணவச் சமூகத்தை நாம் பாடசாலைகளிருந்து உருவாக்கமுடியும் என மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கே.குணநாதன் தெரிவித்தார்.

கல்லடி உப்போடை விவேகானந்தா மகளீர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டும், விளையாட்டுப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு சான்றீதழ்களும்,வெற்றிக்கேடயங்களும் வழங்கி வைத்து பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இந்நிகழ்வு கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் முதல்வர் திருமதி.திலகவதி ஹரிதாஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை(16.2.2018) பிற்பகல் 3.00 மணியளவில் சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன்,மட்டக்களப்பு மாவட்ட வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதான பொறியியலாளர் என்.சசிநந்தன்,
உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் வீ.லவக்குமார்,கோட்டக்கல்வி பணிப்பாளர் கே.அருட்பிரகாசம்,சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபைத்தலைவர் ரீ.சரவணபவன்,கல்லடி கல்வி அபிவிருத்தி அமைப்பின் தலைவர் எஸ்.தேவசிங்கம்,கல்லடி சாண்டோ சங்கரதாஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ரீ.ஸ்ரீகந்தராசா,உட்பட பிரதி அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டார்கள். 

பிரதேச செயலாளர் கே.குணநாதன் தொடர்ந்து பேசுகையில் :-இப்பாடசாலையின் விளையாட்டுப் போட்டியைப் பார்க்கும் போது நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றேன்.ஏன்னென்றால் நானும் படிக்கின்ற காலத்தில் இப்பாடசாலை மாணவிகள் போன்று பல விளையாட்டிலும் பங்குபற்றியுள்ளேன்.இதனை மீட்டுப் பார்க்கும்போது நான் அளவற்ற மகிழ்ச்சி அடைந்துள்ளேன்.

இவ்வாறான விளையாட்டுக்கள் படிக்கின்ற காலத்தில்தான் பங்குபற்ற முடியும்.அன்று விளையாட்டில் காட்டி ஆர்வம்தான் என்னை இந்தளவுக்கு உயர்பதவியில் இருத்தியுள்ளது.நான் படிக்கின்ற காலத்தில் விளையாட்டு உட்பட இணைப்பாடவிதான செயற்பாடுகளில் காட்டிய ஆர்வம் என்னை உயர்பதவியில் வைத்துள்ளது.இவற்றைப்போன்றுதான் மாணவர்களும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும்.ஏனைய பொழுதுபோக்கில் மாணவர்கள் காட்டும் ஆர்வம் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் இன்று காட்டுவதில்லை.காரணம் இலத்திரனியல் தொழிநுட்ப வளர்ச்சியும்,அதன்மீது அதிகமாக செலுத்தப்படும் கவனமும் ஆகும்.

ஆளுமைகளை மாணவர்கள் வலுவுள்ளதாக மாற்றியமைப்பதற்கு இணைப்பாடவிதான செயற்பாடுகளே பிரதான இடத்தைப் பெறுகின்றது.மாணவர்கள் தங்களின் ஆளுமைகளை உறுதிப்படுத்தவேண்டும்.இன்று விளையாட்டுப்போட்டியில் பங்குபற்றும் மாணவர்களின் உடல் உளவிருத்தி சிறப்பாக விருத்தியடைந்திருக்கும்.இதன்மூலம் இப்பாடசாலை மாணவிகள் தலைமைத்துவம்,ஒற்றுமை,சமத்துவம்,சமாதானம்,விட்டுக்கொடுப்பு,வெற்றியின் ரகசியம்,முயற்ச்சி,ஒழுக்கம் ரீதியான விடயங்கள்,மனத்திறன்,ஆற்றல்கள் போன்ற ஆளுமையான பண்புகளை வளர்த்தெடுக்க முடியும்.

இன்று நடைபெறும் விளையாட்டுப்போட்டியில் மட்டுமல்ல கோட்டம்,வலயம்,மாவட்டம்,மாகாணம்,தேசியமட்டப்போட்டியில் இப்பாடசாலை மாணவிகள் சாதிக்க வேண்டும்.இவ்வாறு சாதிக்கும் போதுதான் இப்பாடசாலைக்கும்,பெற்றோருக்கும் கௌரவமும்,உயர்மரியாதையும் தேடிவரும்.எனவே பாடசாலை மாணவர்கள் ஆளுமையுள்ள மாணவ சமுதாயமாக உருவாக்க முடியும்.இப்பாடசாலை மாணவிகள் விளையாட்டு மைதானம் இல்லாமலே விளையாட்டில் மாவட்ட,மாகாண,தேசியரீதியில் சாதித்துள்ளார்கள்.விளையாட்டு மைதானம் இல்லாத பிரச்சனையை அதிபர் என்னிடம் கோரிக்கையையாக முன்வைத்தார்.அவரின் வேண்டுகோளை நான் பரிசீலனை செய்வேன்.இப்பாடசாலையின் மாணவர்களின் உடற்பயிற்ச்சி,அணிநடை உள்ளிட்ட விளையாட்டுக்கள் அத்தனையும் சிறப்பாகவுள்ளது எனத்தெரிவித்தார்.