சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகா

சட்டம் ஒழுங்கு அமைச்சராக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவது உறுதி என சிரேஷ்ட அரசாங்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை சர்வதேச ஊடகவியலாளர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை உறுதிபடுத்தியுள்ளார்.
மேலும், அவருக்கான நியமனம் இன்று வழங்கப்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ந்துவரும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு வகையான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகளை துரிதமாக நிறைவுசெய்யும் வகையிலேயே இந்த நியமனம் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நல்லாட்சியில் தற்போது காணப்படுகின்ற ஸ்திரமற்ற தன்மை காரணமாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க பதவி விலக தீர்மானித்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின.
அதனை தொடர்ந்து அப்பதவிக்கு சரத் பொன்சேகா நியமிக்கப்படப் போவதாகவும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதவிக்கு சரத் பொன்சேகாவின் நியமனத்தை சிரேஷ்ட அமைச்சர் உறுதிபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை விவசாய அமைச்சு உள்ளிட்டு சில அமைச்சுக்களிலும் மாற்றம் ஏற்படும் எனவும், எனினும் அனைத்து அமைச்சுக்களிலும் மாற்றம் ஏற்படாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவையில் இன்று பெரும்பாலும் மாற்றங்கள் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் பிரதான அமைச்சு பதவிகளில் மாற்றம் ஏற்பலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது