திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுதசுவாமி ஆலய மகாகும்பாபிசேகம்! 15வருடங்களின்பின் 2கோடிருபா செலவில் புதுப்பொலிவுகாணும் ஆலயம்

(சகா)
வரலாற்றுப்பிரசித்திபெற்ற 2000 வருடங்கள் பழைமை வாய்ந்த பழைமையும் பெருமையும் உடைய திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் புனராவர்த்தன மகா கும்பாபிசேகம் எதிர்வரும் 25.06.2018 இல் நடைபெறவுள்ளது என ஆலயத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.


கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வாலயத்தின் வரலாறு ஈழவேந்தன் இராவணனோடு தொடர்புடையது. சித்திரவேலைப்பாடுகளினால் புதுப்பொலிவுபெறும் இவ்வாலயம் தற்போது இராஜகோபுரத்தைத் தவிர ஏனைய அனைத்து ஆலயபிரகாரங்கள் புதிதாக அமைக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவு பெற்றுவருகின்றது.




எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி (ஆனித்திங்கள் 11ஆம் நாள்) காலை 9.38 மணிமுதல் 11.25வரையுள்ள சுபமுகூர்த்தவேளையில் மகாகும்பாபிசேகம் நடைபெற திருவருள்கூடியுள்ளது.
முன்னதாக ஜூன் மாதம் 18ஆம் திகதி கும்பாபிசேகத்திற்கான சகல கிரியைகளும் ஆரம்பமாகும். 23ஆம் 24ஆம் திகதிகளில் பக்தர்கள் எண்ணெய்க்காப்பு சாத்தும் வைபவம் நடைபெறவுள்ளது.


ஆலய பிரதமகுருக்கள் விபுலமணி சிவஸ்ரீ.சண்முக மகேஸ்வரக்குருக்களின் ஆலோசனையில் மகா கும்பாபிசேகத்திற்கான யந்திரபூஜை மே 6ஆம் திகதி நடைபெறுமென ஆலயத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.


2000 வருடங்கள் பழைமை வாய்ந்த இக்கோவிலுக்கு 23.10.1828ம் திகதி மீனலக்ன சுபவேளையில் குடமுழுக்குப் பெற்றதாக அறியமுடிகிறது. காலந்தோறும் ஆலய திருப்பணி வேலைகள் செய்யப்பட்டு புனராவர்த்தன மகா கும்பாபிஷேகங்கள் நடைபெற்றுள்ளன. இறுதியாக 12.06.2003ம் திகதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.


கடந்த 2015இன் கடைக்கூற்றில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது.15வருடங்களுக்குப்பிறகு மீண்டும் புனராவர்த்தன மகாகும்பாபிசேகம் எதிர்வரும் ஜூன் மாதம் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது.


புனருத்தாரண வேலையை முன்னெடுக்க 27பேர் கொண்ட தீருப்பணிச்சபையொன்று திருக்கோவில் பிரதேசசெயலாளர் சிவ.ஜெகராஜனைக் காப்பாளராகக்கொண்டு அமைக்கப்பட்டது. திருப்பணிக்கென தனியான கணக்கொன்று திருக்கோவில் மக்கள்வங்கிக்கிளையில் திறக்கப்பட்டு சகல கணக்குவழக்குகளும் மாதாமாதம் பகிரங்கமாக வெளிப்படுத்தட்தப்பட்டுவருகிறது. திருப்பணிக்கும் இறுதிக்கட்ட வேலைகளுக்கும் உதவவிரும்புவோர் 224-1-001-8-0042250 என்ற கணக்கிற்கு வைப்புச்செய்யமுடியுமென்று கூறப்பட்டுள்ளது.


ஆகம விதிகளுக்கும் சிற்பவிதிமுறைகளுக்கமைவாகவும் சிற்பங்கள் பொம்மைகள் அமைக்கின்றபணிகளை அனுபவம் வாய்ந்த சிற்பாச்சாரியார் முருகேசு வினாயகமூர்த்தி லுகன் ரகு மகேஸ்வரன் மற்றும் வர்ணம் தீட்டுதலில் புகழ்பெற்ற ஓவியர் ஜெகதீஸ்வரன் ஆகியோர் மேற்கொண்டுவருகின்றனர்.மூலஸ்தாபன கருவறை பிரகாரக்கோயிலான பிள்ளையார் வசந்தமண்டபம் நவக்கிரகம் சண்டேசுவரர் ஆலய புனருத்தாரணம் என்பன ஆலய நிருவாகத்தினர் மற்றும் பஞ்சயாத்துசபையினரின் நேரப்பங்களிப்பிலே நடைபெற்றுவருகிது.


சுமார் 2 கோடிருபா செலவில் புனரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெறும் ஆலயத்தின் மகாகும்பாபிசேகத்தைக்காண திருக்கோவில் பிராந்தியம் தயாராகிவருகிறது.