சிறுபான்மை சமூகம் தாக்கப்படும்போது பெரும்பான்மை சமூகம் ரசிக்கிறது! – மஹிந்த தேசப்பிரிய

கண்டி மற்றும் புத்தளம் மாவட்டங்களில் அண்மையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான சொத்துக்களுக்கும் வணக்கஸ்தலங்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டமை, பெரும்பாலான சிங்களவர்களுக்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்தியுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுக்கு பெரும்பாலான சிங்களவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது. எனினும், அதில் எவ்வித உண்மையும் இல்லையென அவர் மேலும் தெரிவித்தார்.

இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் கடந்த சனிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையின் போதும் பெருமளவான சிங்களவர்கள் மகிழ்ச்சியுற்றதாக மஹிந்த தேசப்பிரிய இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை, அரேபிய கலாசாரத்தை சில முஸ்லிம்கள் பின்பற்றுவதால் தனிமைப்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத்திற்குள் அவர்கள் தள்ளப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். அத்தோடு, முஸ்லிம்களால் நடத்தப்படும் சிறு பாடசாலைகளுக்கே முஸ்லிம் பெண் பிள்ளைகள் செல்வதற்கு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இவ்விடயங்கள் தொடர்பாக முஸ்லிம் சமூகம் சிந்தித்து, உண்மையை உணர்ந்து, இலங்கை தேசத்திற்குள் அவர்கள் ஒன்றுபடுவது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

அதே சந்தர்ப்பத்தில், நாட்டிலோ உலகத்திலோ கலப்பின்றி தனியாக எந்தவொரு சமூகமும் இல்லையென்பதை சிங்களவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புவதாகவும் மஹிந்த தேசப்பிரிய கூறினார்.

அத்தோடு, இந்தியாவிலிருந்து கஜபாகு மன்னனால் அழைத்துவரப்பட்ட யாராவது தற்போதும் உள்ளீர்களா என்று சிங்களவர்களிடம் கேள்வியெழுப்புவதாக குறிப்பிட்ட மஹிந்த தேசப்பிரிய, பௌத்த பிக்குகளை கல்வி போதிப்பதற்காக முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் அனுமதிக்குமா என்றும் கேள்வியெழுப்பினார்.