காத்தான்குடி பகுதியில் கவனிப்பாரின்றி அலைந்து திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தும் திட்டம்

மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் கவனிப்பாரின்றி அலைந்து திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்தும் திட்டம் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக, நகர சபைத் தலைவர் எஸ்.எச். முஹம்மத் அஸ்பர் தெரிவித்துள்ளார்.

கட்டாக்காலி கால்நடைகள் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“நாளை முதல் காத்தான்குடி நகர சபைப் பிரிவின் எந்தவொரு இடத்திலும் உரிமையாளரின் அல்லது வளர்ப்பாளரின் பராமரிப்பின்றி அலைந்து திரியும் ஆடுகள், மாடுகள் அனைத்தையும் நகர சபை ஊழியர்கள் கைப்பற்றுவார்கள்.

பிரதேசப் பொதுமக்கள், பாடசாலை நிர்வாகம், வாகன ஓட்டுநர்கள், பயணிகள், பொழுது போக்காளர்கள், வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள் ஆகிய பல தரப்பினரிடமிருந்தும் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கும் ஆலோசனைகளுக்கும் அமைவாக குறித்த விடயம் தொடர்பில் தண்டப்பணம் விதிக்கும் திட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

இதன்பொருட்டு நகர சபையால் கைப்பற்றப்படும் கட்டாக்காலிகளுக்கு 5000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்படுவதோடு, 3 நாட்களுக்குள் அந்தக் கட்டாக்காலிகள் எவராலும் உரிமை கோரப்படாதவிடத்து அவை நகரசபையின் உரிமையாக்கப்படும்.










இவ்விடயத்துக்கு கால்நடைகளின் உரிமையாளர்கள் நகர மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொண்டு நகர சபை நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.