பேச்சு, மொழிசார் குறைபாடுடைய மாணவரில் அதிக கவனம் தேவை

பேச்சு மற்றும் மொழிசார் குறைபாடுடைய பிள்ளைகளின் கற்றல் தொடர்பில் ஆசிரியர்கள் கவனம் கொள்ள வேண்டியது அவசியம். இன்று ஒவ்வொருவரிடையேயும் கற்றலின் தேவை வெகுவாக உணரப்பட்ட நிலையில்,கல்வியின் பிரதான நோக்கம் கற்கும் பிள்ளையிடத்தே அறிவு,திறன்,மனப்பாங்கு ரீதியில் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்தலாகும். இதனடிப்படையில் நோக்கும் போது தற்காலத்தில் கல்வியானது பல பரிமாணங்களைப் பெற்று பல்வகைத் தன்மையுள்ளதாக வளர்ச்சி கண்டுள்ளது.

இதில் விசேட தேவைகள்சார் கல்வி,விசேட கல்வி என்பன அதிக முக்கியத்துவம் வாய்ந்தனவாகக் காணப்படுகின்றன.
இவ்வகையில் விசேட தேவைகள்சார் கல்வி என்பது பல்வேறு காரணங்களால் பாடசாலையில் தமது முழுமையான விருத்தியை அடைய முடியாமல் இடர்படுகின்ற பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்வியாகவும் விசேட கல்வி என்பது முழுமையாக இயலாமைக்குட்பட்ட பிள்ளைகளுக்கு விசேடமாகத் தயார் செய்யப்பட்ட கல்வி முறையாகவும் (குறிப்பாக முழமையான பார்வையின்மை- பிறெயிலி முறை)காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். யு​ெனஸ்கோ ஆய்வின்படி உலகில் 140 மில்லியன் பிள்ளைகள் ஊனமுற்றவர்கள் எனவும் அவர்கள் பாடசாலை செல்வதில்லை எனவும் குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் விசேட தேவைகள்சார் கல்வியின் தேவைப்பாடுடையோர் என்ற பகுதிக்குள் பார்வை,கேட்டல் குறைபாடுடையோர், உடல்சார் மற்றும் உடல்நலகுறைபாடுடையோர், அறிவுசார் குறைபாடுடையோர், ஓட்றிஸம் குறைபாடுடையோர், நடத்தைசார் குறைபாடுடையோர், பேச்சு மற்றும் மொழிசார் குறைபாடுடையோர்,கற்றல் குறைபாடுடையோர்,மீத்திறன் கூடிய மாணவர்கள் போன்றோர் உள்ளடங்குபவர்களாகக் காணப்படுகின்றனர்.
இதனடிப்படையில் நோக்கும் போது கற்றலுக்கு மிகவும் பிரதானமாக அமைவது மொழியாகும். ஒரு பிள்ளை தனது தாய்மொழியில் கற்கும் போதுதான் முழுமையானதும் ஆழமானதுமான அறிவினைப் பெற்றுக் கொள்கின்றது.
இன்றைய காலத்தில் ஆங்கிலமொழியின் தாக்கம் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்ற போதிலும் அவை தாய்மொழி மூலமான கற்றலில் பெற்றுக் கொள்ளும்அறிவின் வலிமைக்கு ஈடு இணையற்றதாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறு முக்கியத்துவப்படுத்தப்படும் மொழியானது பிள்ளையிடத்தில் குறைபாடுடையதாகக் காணப்படும் பட்சத்தில் கற்றலில் பாரிய பின்னடைவினை ஏற்படுத்துவதாகவே அமைகின்றது.
இவ்வகையில் பேச்சுக் குறைபாடென்பது,பேச்சொலிகளைஎழுப்புவதில் அல்லது குரலின் தரத்திலேற்படும் சிரமங்களைக் குறிக்கின்றது. மொழிக் குறைபாடென்பது, வார்த்தைகளைப் பயன்படுத்துவதில், விளங்கிக் கொள்வதிலுள்ள இயலாமையினைக் குறிக்கின்றது.(உதாரணம் திக்குதல்)
இவை நரம்புசார்ந்த பிரச்சினைகளால் மட்டுமன்றிஉடல்,செவிப்புலன், மூளை,உதடுகள்,உளவளர்ச்சி,மனவெழுச்சி போன்றனவற்றில் ஏற்படும் குறைபாடுகளின் தன்மையினாலும் ஏற்படுவனவாகக் காணப்படுகின்றன.
பாடசாலையைப் பொறுத்தவரையில் பல்வேறு தரங்களைக் கொண்ட வகுப்பறைகள் காணப்படுகின்றன.இந்த வகையில் மாணவர்களுக்குப் பொருத்தமான கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை மேற்கொள்வதில் ஆசிரியரின் பங்கு மிக முக்கியமானதாகும்.
ஒருவகுப்பறையைப் பொறுத்தமட்டில் அங்கு பல்வேறு இயல்புகளைக் கொண்ட பல மாணவர்கள் காணப்படுவார்கள். அவர்கள் ஒவ்வொருவருடைய தன்மைகளையும் தனிப்பட்ட ரீதியில் ஆசிரியர் இனங்காணும் பட்சத்தில் ஒவ்வொரு மாணவருக்கும் ஏற்ற வகையில் கற்பித்தலினை திறம்பட முன்னெடுக்க முடியும்.
இவ்வகையில் வாய் திக்குதல்,ஒரே சொல்லை மீண்டும் மீண்டும் உச்சரித்தல்,தொடர்ந்து சொல்லின் ஒரு பகுதியை இடர்பாட்டுடன் உச்சரித்தல், இயற்கைக்கு முரணாக கண் இமைகளை அடிக்கடி மூடுதல்,தொடர்ச்சியாக அமைதியைப் பேணுதல்,கதைப்பதற்கு விருப்பமின்மை, கதைக்கும் போது இடர்பாடுகளைக் காட்டுதல் போன்ற நடத்தைகளை மாணவர்கள் சார்பாக ஆசிரியர் அவதானிக்கும் பட்சத்தில் தனது வகுப்பிலுள்ள பேச்சு மற்றும் மொழிக் குறைபாடுடைய பிள்ளைகளை இனங்கண்டு கொள்ள முடியும்.
பிள்ளையிடத்தில் காணப்படும் இத்தகைய குறைபாடானது அவர்களது இயல்புகளின் அல்லது சூழ்நிலையின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கலாம். இத்தன்மையானது மாணவர்களின் கற்றலில் பாரிய பின்னடைவினை ஏற்படுத்துவதாக அமைகின்றது. எனவே இக்குறைபாடுடைய மாணவர்களின் கற்றல் அடைவினை கவனத்தில் கொண்ட வகையில் தனது கற்பித்தல் செயற்பாட்டினை முன்னெடுக்க வேண்டியது ஒவ்வொருஆசிரியரினதும் தலையாய கடமையாகும்.
ஆனால் இன்றைய காலத்தில் எத்தனைஆசிரியர்கள் தமதுபணியின் உன்னத நிலையை அறிந்து அதற்கேற்ப செயலாற்றுகின்றனர் என்று வினாவினால் இதற்கு விடை கூறுவது சற்றுக் கடினமானதாகவே காணப்படுகின்றது.
ஆசிரியர்கள் வெறுமனே சம்பளத்திற்கு மாத்திரம் பணிபுரியாது நாளைய தலைவர்களை உருவாக்கும் பாரிய பொறுப்பு தம்மிடத்தில் உள்ளது என்பதனை உணர்ந்து செயலாற்ற வேண்டியது அவசியமாகும்.
இவ்வகையில் பேச்சு மற்றும் மொழிக்குறைபாடுடைய பிள்ளைகளின் கற்றலை மேம்படுத்துவதற்கான சில வழிமுறைகளாக
விசேட கவனமெடுத்தலும் அவர்கள் மீதான அவதானிப்பினை மேற்கொள்ளலும், பிள்ளைகள் கூறும் விடயங்களைப் பொறுமையுடன் கேட்டல்,அவர்களது தேவைகளை இயன்றளவு நிறைவேற்றுதல்,இக்குறைபாடுடைய மாணவர்களை குழு வேலைகளிலும்,விளையாட்டுக்களிலும் செயற்பாடின்றி இருத்தலைத் தவிர்த்தல், இக்குறைபாடுடைய பிள்ளைகளின் சமுதாய வளர்ச்சியில் விசேட கவனம் செலுத்துதல், செயற்பாடுகளை வழங்குவதன் மூலம் அவர்களிடத்தில் சாதாரண மாணவர்களை ஒத்தவர்கள் என்ற தன்னம்பிக்கையை வளர்த்தல்,சரியாகப் பேசுவதற்குப் போதுமான பேச்சுப் பயிற்சியளித்தல்,வகுப்பிலுள்ள ஏனைய பிள்ளைகளுடன் சரளமாகப் பேசக் கூடிய வகையில் தொடர்பாடல் சூழலைஉருவாக்கல், தண்டிப்பதன் மூலம் அவர்களது தன்மதிப்பைக் குறைக்காதிருத்தல்,எளிய தெளிவான சொற்களைப் பயன்படுத்திக் கற்பித்தலை மேற்கொள்ளுதல்,குழு வேலையின் போது சிரமப்படும் பிள்ளைகளை உதவி செய்ய விரும்பும் பிள்ளைகளுடன் சேர்த்துவைத்தல், விளங்கிக் கொள்ள சிரமப்படும் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தல்களைச் சுருக்கமாக வழங்குதல், புதிய தகவல்களை அறிமுகம் செய்யும் போது தொடர்புள்ள உருவங்களைக் காட்டுதல்,இக்குறைபாடுடைய பிள்ளையின் பெற்றோரை வரவழைத்து வீட்டிலும் பேச்சுப் பயிற்சியினை வழங்குமாறு பரிந்துரை செய்தல் போன்ற உத்திகளை வகுப்பறைக் கற்பித்தலின் போதுஆசிரியர் கையாள முடியும்.
இத்தகைய நடவடிக்கைகளை ஆசிரியர் மேற்கொள்ளும் பட்சத்தில் பேச்சு மற்றும் மொழிசார் குறைபாடுடைய பிள்ளைகளும் தமது கற்றல் செயற்பாட்டினை எவ்விதத் தடையுமின்றி வெற்றிகரமான முறையில் சிறப்பாக மேற்கொள்ள முடியும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
ஜெ. ஜெயரேகா
(கல்வியியல் துறைசிறப்புக் கற்கை)
கிழக்குப் பல்கலைக்கழகம்