தற்போது விளையாட்டுத்துறைக்கு பல்கலைக் கழக பட்டம்

இலங்கையின் வரலாற்றில் இல்லாதவாறு விளையாட்டுத்துறைக்கு பல்கலைக் கழக பட்டம் வழங்குகின்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி என தெரிவித்தார்.

வாழைச்சேனை கிண்ணையடி மில்லர் விளையாட்டுக் கழகத்தின் சித்திரை புத்தாண்டு விளையாட்டு விழா கழக மைதானத்தில் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற போது கலந்து கொண்டு மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

பொருளாதார ரீதியான போட்டி, அறிவு ரீதியான போட்டி போட்டு கொண்டு வளர்கின்ற ஒரு சமூகத்தில் நாங்கள் வாழ்ந்து வருகின்றோம். எமது கிராமம் போட்டி மிக்க உலகில் அபிவிருத்தியடை வேண்டுமாக இருந்தால் பல்வேறு விதமான புதுமையான அனுகுமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

மக்களை ஒன்றுபடுத்தக் கூடிய களமாக இத்தகைய விளையாட்டுக்களை பார்க்க முடியும். எமது கமூகத்தில் உள்ளவர்களை ஒன்றுபடுத்த வேண்டுமாக இருந்தால் ஒரு களத்தில் பல்வேறு விதமாக நிகழ்வுகளை நடாத்துவதன் மூலம் ஒன்றுபடுத்தலாம்.

விளையாட்டுக் கழகங்கள் பாடசாலை மாணவர்களின் செயற்பாடுகளை பலப்படுத்துவதற்கு பாரிய ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. எங்களது இளம் சிறார்கள் பாடசாலைக்கு செல்வதில் காட்டி வரும் கவனக் குறைவு அல்லது பிள்ளைகளை பராமரிப்பவர்களின் கவனக் குறைவு காரணமாக பாடசாலை பாரிய சவால்களை எதிர்கொள்கின்றது.

இலங்கையின் வரலாற்றில் இல்லாதவாறு விளையாட்டுத் துறைக்கு பட்டம் வழங்குகின்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது பல்கலைக் கழகத்தில் இரண்டாவது அணி மாணவர்கள் நுழைவு பெற்றுள்ளனர். இன்னும் இரண்டு வருடங்களின் பிற்பாடு முதலாவது விளையாட்டு துறை பட்டதாரிகளாக வெளியேறுவார்கள்.


இலங்கையில் தற்போது பல்வேறு துறைகளின் ஊடாக உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொள்ள கூடிய வழிகள் உள்ளது. எனவே ஆர்வத்தோடு விளையாட்டில் ஈடுபடும் பிள்ளைகளை ஈடுபடுத்த வேண்டும் என்றார்.

மில்லர் விளையாட்டுக் கழக தலைவர் எஸ்.குகதீசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கோ.கருணாகரம், வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.குணசேகரம் மற்றும் அரச அதிகாரிகள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.