மக்கள் பரிதாபம்: 16 பேர் உயிரிழப்பு! 22 மாவட்டங்களில் 38 ஆயிரத்து 205 பேர் பாதிப்பு!


சீரற்ற காலநிலையினால்; 22 மாவட்டங்களின் 164 பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்தப் பிரதேசங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இததொடர்பாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பத்திராஜா தெரிவிக்கையில் இங்கு ஒரு இலட்சத்து 38 ஆயிரத்து 205 பேர் வரை நிர்க்கதியாகியுள்ளதாக கூறினார்.

ராகல பிரதேசத்தில் நேற்றைய தினம் ஒன்பது வயது சிறுமி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பலியான நிலையில் மரணங்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. 34 ஆயிரத்து 218 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 235 சமூக நலன்புரி நிலையங்களில் 13 ஆயிரத்து 244 குடும்பங்களைச் சேர்ந்த 53 ஆயிரத்து 722 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் பணிப்பாளர பத்திராஜா குறிப்பிட்டார்.

வெள்ளம், மண்சரிவு, நிலச்சரிவு அனர்த்தங்கள் காரணமாக 16 மாவட்டங்களில் மூவாயிரத்து 932 வீடுகள் சேதமடைந்துள்ளன. இவற்றில் 64 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பத்திராஜா தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கம் இதுவரை சுமார் ஆறு கோடி ரூபாவைச் செலவிட்டுள்ளதாக இடர் நிவாரண சேவைகள் மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் சாவித்ரி ஜயக்கொடி குறிப்பிட்டார். நிவாரணப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.