முள்ளிவாய்க்கால் நினைவை தொடர்ச்சியாக உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே


இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே பல்வேறு மக்கள் மன்றங்களும் இந்நிகழ்வினை நடத்துவதாக இருக்கின்றன. அவற்றிக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம் இருந்தபோதிலும் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இந்நிகழ்வினைச் செய்து வருகின்றவர்கள் என்கின்ற உரித்தை நாங்கள் நிலைநாட்டிக் கொண்டு

பொதுமக்களையும் அழைத்து இந்த நினைவேந்தலை உணர்வு பூர்வமாகச் செய்யவிருக்கின்றோம். என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் மட்டக்களப்பில் மேற்கொள்ளவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் இன்று (16) இலங்கைத் தமிழரசுக் கட்சிக் காரியாலத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் தெரிவித்தார்.

இவ் ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராசா, பாக்கியசெல்வம் அரியநேத்திரன், ஜனநாயக் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை ஊடகப் பேச்சாளர் ப.சாந்தன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன் போது மேலும் தெரிவிக்கையில்,

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி தமிழர்களின் போராட்டம் சர்வதேச சக்திகளின் ஆதரவோடு சர்வதேச நியமங்களுக்கு அப்பால் நின்று மௌனிக்கச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எங்களுடைய அவலங்களை வெளியுலகிற்கு எடுத்துக் காட்டும் முகமாகவும், சுதந்திரம் அடைந்த நாள் தொட்டு முள்ளிவாய்க்கால் அவலம் வரையில்

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அஞ்சலி செலுத்தும் முகமாகவும் தமிழரசுக் கட்சி இணைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

அதே போல் 2010ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி கொக்கட்டிச்சோலையிலும், 19ம் திகதி மாமாங்கத்திலும் கிரியைகள் மேற்கொண்டு இந்த நினைவு தினத்தை முதலாவதாக அனுஷ்டித்தோம். அதே போன்று தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நாங்கள் அனுஷ்டிப்பினை செய்து வருகின்றோம்.

வடக்கு கிழக்கிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிலும் சிறப்பாக தமிழரசுக் கட்சியே இந்த விடயங்களை முன்னெடுத்து வந்திருக்கின்றது. நாங்கள் மட்டக்களப்பில் 2011 களுவாஞ்சிக்குடியிலும், 2012 அரசடித்தீவிலும், 2013 கொக்கட்டிச்சோலையிலும், 2014 வந்தாறுமூலையிலும், 2015 கல்முனை மற்றும், வவுணதீவிலும், 2016 வந்தாறுமூலையிலும், 2017 வாகரையிலும் மேற்கொண்டு வந்திருக்கின்றோம்.

தற்போது 2018ம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு எங்கனும் உணர்வுபூர்வமாக மக்களின் ஆதரவோடு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் வடக்கு மாகாணத்திலே இது தொடர்பான பல்;வேறு சர்ச்சைகள் இடம்பெற்று ஒருவாறு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு நினைவேந்தல் சமாதானமான சூழ்நிலையிலே நடைபெறுவதற்கு இருக்கின்றது என்பதை மக்கள் அறிவார்கள்.

எம்மைப் பொருத்தவரையில் மட்டக்களப்பில் நாங்கள் தொடர்ந்து செய்து வருகின்ற இவ் அனுஷ்டிப்பு நிகழ்வின் தொடர்ச்சியாக இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய கூட்டுக் கட்சிகளோடு, ஜனநாயகப் போராளிகள் மற்றும் தேசத்தின் வேர்கள் போன்ற முன்னாள் போராளிகளின் அமைப்புகளும் இணைந்து இந்த நிகழ்வினை நடத்துவதற்கு முன்வந்திருக்கின்றார்கள் என்ற அடிப்படையில் வருகின்ற 18ம் திகதி வெள்ளிக்கிழமை கிரான் கிராமத்தில் இந்து, கிறிஸ்தவ வழிபாடுகளோடு இந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நாங்கள் மேற்கொள்ளவிருக்கின்றோம்.

கிரான் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இந்து வழிபாடுகளும், கிரான் கிறிஸ்தவ சேவா ஆச்சிரமத்திலே கிறிஸ்தவ வழிபாடுகளும் காலை 09.00 மணிக்கு ஆரம்பிக்கப்படும். பின்னர் 12.00 மணிக்கு பூசைகள் நடைபெறுகின்ற பூசையைத் தொடர்ந்து ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய முன்றலில் நினைவுத் தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறும். அதனைத் தொடர்ந்து மலரஞ்சலி நடைபெறும். அதன்பின்னர் அன்னதானத்துடன் இந்த நினைவேந்தல் நிகழ்வினை நிறைவு செய்ய இருக்கின்றோம்.

அதே நேரத்திலே மட்டக்களப்பு மாவட்டத்திலே பல்வேறு மக்கள் மன்றங்களும் இந்நிகழ்வினை நடத்துவதாக இருக்கின்றன. அவற்றிக்கும் எமது வாழ்த்துக்களைத் தெரிவிக்கின்றோம் இருந்தபோதிலும் ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இந்நிகழ்வினைச் செய்து வருகின்றவர்கள் என்கின்ற உரித்தை நாங்கள் நிலைநாட்டிக் கொண்டு பொதுமக்களையும் அழைத்து இந்த நினைவேந்தலை உணர்வு பூர்வமாகச் செய்யவிருக்கின்றோம்.

அதே நேரத்தில் அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் தங்களின் உரிமை தொடர்பான விடயத்தில் எவ்வாறான உறுதிப்பாட்டோடு இருக்கின்றார்கள் என்பதை வெளிக்காட்டுவதோடு, சர்வதேசமும் தமிழ் மக்களின் விடயங்கள் தொடர்பில் அரசியல் தீர்வு இன்னும் இந்த நாட்டிலே எய்தப்படவில்லை என்கின்ற விடயத்தைக் கவனத்திற் கொண்டு வரஇருக்கின்ற இந்த பதினெட்டு பத்தொன்பது மாதங்களில்

நாங்கள் எதிர்பார்த்திருக்கின்ற கூட்டாட்சியைக் கொண்ட இந்த அரசியல் தீர்வுத் திட்டத்தை எழுதி அதனை நிறைவேற்றுவதற்கு ஏற்ற சூழ்நிலையை இலங்கை அரசும், சர்வதேசமும் கவனத்திற்கொண்டு செயற்படுத்த வேண்டும் என்கின்ற செய்தியுடனான இந்த வேண்டுகோளை எமது இந்த விடுதலைப் போராட்டத்திலே தங்களுடைய இன்னுயிர்களை ஈகம் செய்த அனைத்து உறவுகளுக்கும் அஞ்சலியாக அரசுக்கும் சர்வதேசத்திற்கும் விடுக்கின்றோம்.

அரசியற் தீர்வு கிடைக்க வேண்டும் என்கின்ற நம்பிக்கையோடு தான் நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். அரசியலிலே சடுதியான பல மாற்றங்கள் ஏற்படக் கூடும். நாங்கள் எதிர்பாத்துக் கொண்டிருக்கின்ற நிலைமைகள் திடீரென மாறுகின்ற சூழலும் அரசியலிலே ஏற்படாலம். எங்களைப் பொருத்தவரையிலே அரசியற் தீர்வுத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.

மிக அண்மையில் எமது எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரைச் சந்தித்து புதிய அரசியலமைப்புச் சட்ட நடவடிக்கைகள் தொடர்பாக வலியுறுத்தியிருக்கின்றார். நடவடிக்கைக் குழுவினுடைய செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான திகதியும் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றது என அறிகின்றோம். அது உத்தியோகபூர்வமாக மிக விரைவிலே அறிவிக்கப்படும்.

என்ன நிலைமையிருந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து 16 பேர் பிரிந்து சென்றிருந்தாலும் அவர்கள் கூட புதிய அரசியலமைப்புத் திட்டம் தொடர்பில் ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்திருக்கின்றார்கள். இந்த நிலைமையில் கூட்டு எதிர்க்கட்சியும் நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்திற் கொண்டு அரசியற் தீர்வுத் திட்டத்திற்கு ஆதரவளித்து நாட்டை முன்னேற்றுவதற்குரிய செயற்பாடுகளைச் செய்யும் என்ற அடிப்படையிலே அரசியற் தீர்வுத் திட்டம் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இந்த முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி செயற்பாட்டினை தமிழரசுக் கட்சிதான் தொடக்கத்தில் இருந்து முன்நடத்திக் கொண்டு வருகின்றது. இந்த வருடம் தான் இது அரசியல் மயப்படுத்தப்படுகின்றது என்கின்ற சொற்பிரயோகங்கள் வருகின்றன. தமிழர்களைப் பொருத்தவரையில் தமிழர்களுடைய முழு வாழ்வும் அரசியல்மயப்படுத்தப்பட்ட ஒன்று ஏனெனில் விடுதலை அடைகின்ற ஒரு இனத்திற்கு அரசியல் மிக முக்கியமானது.

அந்த வகையிலே இது அரசியல் மயப்படுத்தபட்டது என்று சொல்வதை விட நாங்கள் முழுமையான யதார்த்தமான ஒரு நிலைமையை வெளிக்கொண்டு வருகின்றோம் என்பதுதான் முக்கியமே தவிர இதனை நாங்கள் உரிமை கொண்டாடுவதற்காக அரசியல் மயப்படுத்தவில்லை. இது இயல்பாகவே இருக்கின்ற அரசியல் நிலைமைகளுக்கூடாகவே சென்று கொண்டிருக்கின்றது என்பதை மக்கள் விளங்கிக் கொள்வார்கள்.

வடக்கில் தான் யார் நினைவேந்தலை நடாத்துவது என்கின்ற நிலைமை ஏற்பட்டது. ஆனால் கிழக்கலே அவ்வாறான பிரச்சினை ஒன்றும் ஏற்படவில்லை. தமிழரசுக் கட்சி தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்கின்ற பதத்தோடு வழமைபோல் இந்நினைவேந்தலை மேற்கொள்கின்றோம். வேறு சிலர் அவ்வப்போது அறிக்கை விடுகின்றார்கள். ஆனால் நாங்கள் யாருக்கும் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கவில்லை. இது தொடர்பாக அக்கறையுள்ள யாருமே இதனைச் செய்யலாம் என்று தெரிவித்தார்.