காரைதீவைப் பிரித்தாள ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை! - தவிசாளர் ஜெயசிறில்


(காரைதீவு நிருபர் சகா)
கிழக்கில் முன்மாதியாகவுள்ள இவ் உயரிய சபையில் கௌரவ உறுப்பினர்கள் இனரீதியான பேச்சுக்களைத் தவிர்த்துக்கொள்ளவேண்டும். எக்காரணம்கொண்டும் காரைதீவைப் பிரித்தாள ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.

இவ்வாறு காரைதீவு பிரதேசசபையின் 2வது மாதாந்த அமர்வின்போது சபை உறுப்பினர்களின் உரைகளின் பின்னர் கடுமையான தொனியில் உரையாற்றிய சபையின் தவிசாளர் கி.ஜெயசிறில்  கூறியிருந்தார்

இவ் அமர்வு (14) திங்கட்கிழமை மாலை சபாமண்டபத்தில் தவிசாளர் தலைமையில் இரண்டரை மணிநேரம் நடைபெற்றது.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:

புனித ரமழான் நோன்பு வருகின்ற காரணத்தினால் முதற்கட்டமாக ஒருதொகுதி மின்விளக்குகளை வாங்கி முஸ்லிம்சகோதரர்கள் வாழும் மாளிகைக்காடு மற்றும் மாவடிப்பள்ளிக்கு பொருத்துமாறு உத்தரவிட்டேன்.

அது உங்களுக்கு கடுகளவாக இருந்தாலும் சபையைப்பொறுத்தவரையில்  அது மலையளவான விடயம்.
இன்னும் காரைதீவுக்குள் ஒரு மின்விளக்குக்கூட பொருத்தவில்லை என்ற செய்தியை சகோதரர்கள் அறிந்துகொள்ளவேண்டும்.

எந்தக்காரணம் கொண்டும் காரைதீவை கண்ணகிபுரம் சித்தானைக்குட்டிபுரம் நந்தவனம் சல்லித்தீவு மாவடிப்பள்ளி மாளிகைக்காடு என்றெல்லாம் பிரித்துப்பார்க்கப்போவதில்லை.
காரைதீவை பிரித்தாள யாருக்கும் அனுமதியளிக்கப்படமாட்டாது.

வாக்களித்த மக்களின்தேவைகளை 2மாதத்திற்குள் தீர்ப்பதானால் சபை உறுப்பினராக இருந்துசரிவராது. அமைச்சராகித்தான் அதனை நிறைவேற்றவேண்டும்.


மாளிகைக்காட்டில் எயார்ரெல் ரவர் நிறுவ என்னிடம் கேட்டதற்கு சபை உறுப்பினர்களிடம் கேட்டே சொல்வேன் என்று உங்களுக்கு கௌரவமளித்தேன். இல்லாவிட்டால் அனுமதியை நான் வழங்கியிருக்கலாம். ஆனால் நான் அப்படிச் செய்யவில்லை. இன்று உங்களிடம் கேட்டேன். நீங்கள் எதிர்த்தீர்கள். ஆகவே ரவர் நிறுவமுடியாது. இப்படித்தான் அனைவரையும் கௌரவப்படுத்துகின்றேன்.

சபையின் வருமானம் குறைவாயிருக்கும் போது செலவைக்கூட்ட எப்படி முடியும்? எனவே வருமானத்திற்கான வழிவகைகளையும் கூறவேண்டும். நுண்கடன் விடயத்தில் அனைவரும் இணைந்து ஏகோபித்த தீர்மானம் எடுத்ததில் மகிழ்ச்சியடைகின்றேன்.
112வேட்பாளர்களில் 12உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளோம்.

 நாமனைவரும் இனமதபேதமற்றமுறையில் கட்சிமுறைமைகளுக்கு அப்பால் 12ஆயிரத்து 500 மக்கள் நலன்கருதி ஒற்றுமையாக சேவையாற்றவேண்டும். கிழக்கில் முன்மாதிரியான சபையாக மீண்டும் இச்சபையை மிளிரச்செய்யவேண்டும். என்றார்.

உபதவிசாளர் எ.எம்.ஜாகீர்(சு.கட்சி) உரையாற்றுகையில்:
மாளிகைக்காடு மீன்சந்தையை நவீனமயமாக்கவேண்டும். மூடப்பட்டுள்ள சனசமுகநிலையத்தை மீளவும் திறக்கவேண்டும்.அத்துடன் மையவாடிக்கு  பல்புகள் போடப்படவேண்டும். ஒரு கட்டத்தில் போன் வெளிச்சத்தில்  மையத்தை அடக்கிய வரலாறுமுண்டு. நிதியை விகிதாசாரத்தில் ஒதுக்கவேண்டும். என்றார்.