மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஐந்து மாதத்தில் 75க்கு மேற்பட்ட தற்கொலைச் சம்பவங்கள்

(ஏறாவூர் நிருபர் ஏஎம் றிகாஸ்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஐந்து மாத காலப்பகுதிக்குள் 75 க்கு மேற்பட்ட தற்கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸீர் தெரிவித்துள்ளார்.

நுண்கடன் தொல்லையினாலேயே அதிக தற்கொலைகள் இடம்பெற்றுள்ளதனால் பொதுமக்களை விழிப்புணர்வு மற்றும் வாழ்வாதார வேலைத்திட்டங்களை  குறிப்பாக தமிழ் அரசியல் தலைமைகள் உடனடியாக முன்னெடுக்கவேண்டுமென்றும் அவர் கூறினார்.

இதேவேளை, நுண்கடன் தொல்லையினால்   பாதிக்கப்பட்ட இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று  மட்டக்களப்பு மாவடி வேம்பு பிரதேசத்தில்     தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஐந்து வயதுடைய  ஒரு குழந்தையின் தந்தையான   22 வயதுடைய சின்னத்தம்பி என்றழைக்கப்படும் சந்திரமோகன் கிருபைராசா என்பவரே மரணமடைந்தவரென ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

நுண்கடன் வழங்கும் மூன்று நிறுவனங்களில் ஒரே காலத்தில் கடனைப்பெற்று தவணைப்பணத்தைச் செலுத்தமுடியாத நிலையில்  மற்றுமொரு நுண்கடன் நிறுவனத்தில்       ஐந்து இலட்சம் ரூபா கடனைப் பெற்றுக்கொள்ள  மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்காததையடுத்து    இவர் தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவரது தாயின்  வீட்டு முற்றத்தின் கூரை வளையில் புடைவையினால் கழுத்தில் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.                          அவரது தாயிடம் பணம் பெற்றுவருவதாகக்கூறி மனைவியின் வீட்டிலிருந்து தாயின் வீட்டிற்கு வந்த இவர், அங்கேயே இரவு தங்கியிருந்துள்ளார். அதிகாலை வேளையில் படுக்கைப்போர்வையினால் கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்கிய நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

ஏறாவூர் பொலிஸ் மற்றும் மட்டக்களப்பு தடயவியல் பொலிஸ் பிரிவினரும் இச்சம்பவம் குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.