காணி பிரச்சனை ! வேலியிட சென்ற முஸ்லிம்கள் மீது தாக்குதல் - வீடியோ



ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட அக்கரைப்பற்று - பொத்துவில் வீதியிலுள்ள இராணுவ முகாமுக்கு அருகில், தங்களுக்குச் சொந்தமான காணியெனத் தெரிவித்து வேலியிடச் சென்ற ஒரு சாரார் மீது, நேற்று (18) தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதோடு, அவர்களது மோட்டார் சைக்கிள்களும் நாசப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, இன்று (19) அப்பகுதியில், பதற்றமான சூழ்நிலை தொடர்ந்தது.

இது தொடர்பில், பிரதேச சபைத் தவிசாளர் க.பேரின்பம் கூறியதாவது,

பிரதேச சபையால் களப்பு முகாமைத்துவப் பிரதேசமாக அடையாளபடுத்தப்பட்ட சதுப்புநிலமென அழைக்கப்படுகின்ற பகுதிகளை, “கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களச் சட்டத்தின் 2009 ஓகஸ்ட் 13 இலக்க 1614/19 உறுப்புரையின் கீழ், மீனவ முகாமைத்துவ பிரதேசமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், சட்டத்தின் பிரகாரம் குறித்த இடத்தை அடையாளப்படுத்தும் படி, எமக்கு அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில், அப்பகுதியை எல்லையிட்டு அடையாளப்படுத்தி, பிரதேச சபையின் அனுசரணையில், அறிவித்தல் பலகையும் வைக்கப்பட்டது.

“இந்நிலையில், அந்த அறிவித்தல் பலகை சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில், அக்கரைப்பற்று பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நேற்று முன்தினச் சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக, அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சென்றபோது, காலதாமதமாகவே சம்பவ இடத்துக்கு வந்ததாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

மேலும், இந்த நிலைமை தொடர்பில், தாம் தமது தரப்புடன் சட்ட ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் இது தொடர்பில், பிரதேச செயலகத்துடன் இணைந்து, ஒரு தீர்க்கமான முடிவொன்றை எடுக்கவுள்ளதோடு, பொதுமக்கள், தயவுசெய்து இவ்விடயத்தில் அமைதிகாக்க வேண்டுமென, பிரதேச சபை தவிசாளர் கோரினார்.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.