கல்முனை மினிச்சூறாவளியின் தாக்கத்தை பிரதேசசெயலாளர் லவநாதன் நேரில் சென்று பார்வை!


(காரைதீவு  நிருபர் சகா)

கல்முனையில் நேற்றுமுன்தினம் (17) மாலை 5மணியளவில் வீசிய மினிச்சூறாவளியினால் ஏற்பட்ட சேதவிபரங்களைப் பார்வையிட கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் கந்தையா லவநாதன் நேற்று (18) நேரில்சென்று பார்வையிட்டார்.

மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனும் ஏனைய த.தே.கூட்டமைப்பு உறுப்பினர்களும் சென்றிருந்தனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசரமாக உலருணவு நிவாரணம் வழங்குவதோடு உரிய நஸ்ட்ட ஈட்டைப் பெற்றுத்தரவேண்டுமென அவர்கள்  பிரதேசசெயலாளரிடம் வேண்டுகோள்விடுத்தார்.

தற்சமயம் அந்தந்த பிரதேச கிராமசேவை உத்தியோகத்தர்கள் கணக்கெடுப்பை நடாத்துகின்றனர். உரிய கிராமசேவை உத்தியோகத்தர்கள் உரியவிபரங்களை சமர்ப்பிக்குமிடத்து அவற்றைத்துரிதமாக மேற்கொள்ள தாம் தயாராக விருப்பதாக பிரதேசசெயலாளர் லவநாதன் தெரிவித்தார்.

கல்முனை 1 ஆம் 2 ஆம் பிரிவுகளில் 35க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 வீடுகளுக்கு பகுதியளவு சேதமேற்பட்டுள்ளது.

ஏனைய பாண்டிருப்பு நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு பெரியநீலாவணை போன்ற கிராமங்களிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. எனினும் அங்கு சுமார் 15 வீடுகள் பாதிக்கப்பட்டிருக்கலாமெனத் தெரிகிறது.

ஆலயங்களில் இருந்த மரங்கள் அடியோடு வீழ்ந்து சேதத்தை உண்டுபண்ணியுள்ளது. பல வேலிகள் தரையோடு சாய்ந்து கிடந்தன. மதில்கள் உடைந்து கீழேகிடந்தன.

கடற்கரையில்   கட்டிவைக்கப்பட்டிருந்த இயந்திரப்படகுகள் காற்றில் அடித்துச்செல்லப்பட்டு கடலினுள் வீசப்பட்டன.
கடலினுள் இழுத்துச் செல்லப்பட்ட படகுகளை மீனவர்கள் மீண்டும் இழுத்துக்கரைசேர்த்தனர்.