காரைதீவு சித்திரை விளையாட்டின் போது சறுக்கு மரத்திலிருந்து தவறிவிழுந்த வீரர் உயிரிழப்பு!

காரைதீவில் இடம்பெற்ற சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு விழாவில் சறுக்குமரம் ஏறிய போது சறுக்கிவீழ்ந்த வீரர் 50 நாட்களின் பின்னர் நேற்று முன்தினம் மரணமானார்.

காரைதீவைச் சேர்ந்த சாமித்தம்பி தவராசா(வயது41) என்பவரே இவ்விதம் மரணமானார்.

சித்திரைவருட பாரம்பரிய விளையாட்டுவிழா காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டரங்கில் நடைபெற்றபோது வழமையாக சறுக்குமரம் ஏறும் அவர் இம்முறையும் ஏறியிருந்தார்.

ஏறி கடைசிக்கட்டத்தில் கிறீசை துடைத்தெறிந்துவிட்டு கட்டியிருந்த கயிற்றை எட்டிப்பிடிக்க பிடி தவறியதும் அந்தரத்தில் பலரும் பார்த்திருக்க தரையில் தொப்பென்று வீழ்ந்தார்.

எலும்புகள் முறிந்த நிலையிலும் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட நிலையிலும் அவரை உடனே கல்முனை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்தனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

அங்கு சுமார் 48 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. இறுதியில் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர்.வீட்டில் வைத்து அரவது உயிர் பிரிந்திருக்கின்றது.