அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழா


(அகமட் எஸ். முகைடீன்)

அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஹரீஸின் முயற்சியினால் கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள விபத்து அவசர சிகிச்சைப் பிரிவுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் இரத்த வங்கி திறப்பு விழாவும் நேற்று (17) ஞாயிற்றுக்கிழமை மாலை அவ்வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி ஏ.எல்.எப். றகுமான் தலைமையில் குறித்த வைத்தியசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக சுகாதாரஇ போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் வைத்திய கலாநிதி ராஜித சேனாரத்ன, சுகாதார போசணை மற்றும் சுதேச வைத்திய பிரதி அமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நசீர்இ கல்முனை மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி ஏ.எம். றகீப் உள்ளிட்ட கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், அமைச்சின் உயர் அதிகாரிகள், திணைக்களங்களின் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது 200 மில்லியன் ரூபா செலவில் 6 தளங்களைக் கொண்டதாக அமைக்கப்படவுள்ள குறித்த கட்டடத்திற்கான அடிக்கல்லை நட்டி வைத்து நினைவுப்படிகத்தினையும் அமைச்சர் ராஜித சேனாரத்ன திரைநீக்கம் செய்துவைத்தார். அத்தோடு இரத்த வங்கியினையும் திறந்துவைத்தார்.

மருத்துவக் கட்டடம், அறுவைச் சிகிச்சைக் கட்டடம், களஞ்சியசாலை உள்ளிட்ட தேவைகளுக்கான கட்டடம் ஆகிய பிரத்தியோக 3 கட்டடங்களையும் 5 தளங்களைக் கொண்டதாக எனது அமைச்சுக் காலப்பகுதிக்குள் அமைத்துத் தருவதாகவும் சி.ரி ஸ்கேனர் மற்றும்  மெமோகிராம் இயந்திரம் போன்றவற்றையும் மிக விரைவில் வழங்கிவைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்நிகழ்வின்போது தனது உரையில் தெரிவித்தார்.