ஆறு கடக்கும் மட்டும் அண்ணன் தம்பி ஆறு கடந்த பின்பு நீயாரோ நான் யாரோ - துரைராசசிங்கம்


அன்றிலிருந்து இந்த நாட்டிலே சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து வந்த எல்லா நிலைமைகளிலும் நாங்கள் ஒடுக்கப்பட்டிருக்கின்றோம். நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம், எமது தலைமைகள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். ஆறு கடக்கும் மட்டும் அண்ணன் தம்பி ஆறு கடந்த பின்பு நீயாரோ நான் யாரோ என்பதுததான் தமிழ் மக்களின் கண்ணீர்க்கதையாக இருக்கின்றது என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளரும், கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

சித்தாண்டி சிகண்டி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் சனிக்கிழமை மாலை இடம்பெற்ற கலைமுற்றம் கலைநிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்தார்.

சிகண்டி அறக்கட்டளையின் தலைவர் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் மு.முரளிதரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன் மற்றும் பல அதிதிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
இளைஞர்கள் நம்முடைய இந்தக் கலைகளை அதனுடைய இயற்கையோடு, இயல்போடு சேர்ந்ததாகக் கட்டிக் காத்திட வேண்டும். இவ்வாறான கலைகள் தற்போது இருக்கின்ற நவீன தொழில்நுட்பத்தில் வெறுமனே பார்த்து ரசிக்கின்ற அளவிற்கு மாத்திரம் தான் இருக்கின்ற காலகட்டத்தில் நமது மூதாதையரின் படைப்புகளை ஊக்குவிக்கும் இந்தச் செயற்பாடு மிகவும் வரவேற்கத்தக்கது.

இந்த நாட்டிலே தமிழர்கள் மிகச் சிறப்போடும் சீரோடும் வாழ்ந்திட்டவர்களாக இருக்கின்றார்கள். இந்த நாட்டினுடைய அரசியலிலே மிகச் சிறந்த இடத்தை நம்முடைய தமிழர்கள் பெற்றிருக்கிறார்கள். ஆசிய நாட்டிலேயே சேர் பட்டம் பெற்ற முதலாவது ஆசிய நாட்டவராகவும் ஒரு தமிழரே திகழ்ந்திருக்கின்றார்.

ஒரு காலத்தில் முழுப்பெரும்பான்மை மக்களும் சேர்ந்து ஒரு படித்த தமிழ் தலைவரை உருவாக்கிய பெருமை எமக்கு உண்டு. 1912, 1916ம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசவைத் தேர்தலில் சிங்களத் தலைவர்கள் இருக்கையில் தமிழ் தலைவரான சேர்.பொன்.இராமநாதன் அவர்களை மக்கள் தெரிவு செய்திருந்தனர்.

சேர்.பொன்.இராமநாதன் அவர்களும், சேர்.பொன்.அருணாசலம் அவர்களும் இந்த நாட்டுக்கு முழுமையான சுதந்திரம் வேண்டும் என்கின்ற விடயத்தை சிங்களத் தலைவர்களுக்கு ஊட்டி அதன் மூலம் இந்த நாடு சுதந்திரம் பெற வேண்டும், சுதேசியம் வளர வேண்டும் என்ற எண்ணத்தை அரசியல் விதையை சிங்களத் தலைவர்களுக்கு ஊட்டி வளர்த்தவர்கள்.

தேசிய காங்கிரஸ் என்கின்ற அமைப்பினை உருவாக்கி அனைத்து தலைவர்களையும் ஒருங்கிணைத்தார்கள். அதன் மூலம் இந்த நாட்டினுடைய மக்கள் தங்களின் சுயாட்சியைப் பெற வேண்டும் என்றால் எல்லோரும் ஒருங்கிணைந்து அதற்காககப் பாடுபட வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் ஆறு கடக்கும் மட்டும் அண்ணன் தம்பி ஆறு கடந்த பின்பு நீயாரோ நான் யாரோ என்பதுததான் தமிழ் மக்களின் கண்ணீர்க்கதையாக இருக்கின்றது என்பது அடுத்த கட்ட நகர்வுகளில் இருப்பதை நாங்கள் காண்கின்றோம்.

எந்த மக்கள் எல்லாம் தங்களுடைய தலைவராக சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம் அவர்களை எடுத்துக் கொண்டார்களோ அதே சிஙகளத் தலைவர்கள் பிரதேசவாரிப் பிரதிநிதித்துவம் ஒன்று வருகின்ற போது கொழும்பில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேச தேர்தல் தொகுதியை தமிழர் ஒருவருக்கு தருவதாக வாக்களித்துவிட்டு இறுதியில் கைவிட்டுவிட்டார்கள். தேர்தல் மனு கச்சேரியில் தாக்கல் செய்வதற்குப் போகின்ற நேரத்தில் சிங்களத் தலைவர்கள் சிங்களவர் ஒருவரை அதற்காக நியமித்தார்கள். இதிலிருந்துதான் தமிழருக்கும் சிங்களவருக்குமான அரசியல் விரிசல் ஒன்று ஏற்பட்டது.

எனவே தான் சேர்.பொன்.அருணாசலம் அவர்கள் யாழ்ப்பாணம் சென்று தமிழர்கள் ஏகாதிபத்தியத்தோடு வாழ வேண்டும் என்றால் பெரும்பாண்மை மக்களோடு சேர்ந்து நாங்கள் எமது உரிமையைப் பெற்றுக்கொள்ள முடியாது நாங்கள் தனித்துவமாக இருந்து எங்களுடைய அரசியல் உரிமையபை; பெற வேண்டும் என்ற பாங்கிலே தான் தமிழர் மகாசபை ஒன்றை ஏற்படுத்தினார்.

அன்றிலிருந்து இந்த நாட்டிலே சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து வந்த எல்லா நிலைமைகளிலும் நாங்கள் ஒடுக்கப்பட்டிருக்கின்றோம். நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றோம், எமது தலைமைகள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். ஆகமொத்தத்தில் சொல்லப்போனால் சிங்களத் தலைவர்களுக்குத் தலைவர்களாக இருந்தவர்களுக்கு ஏகாபத்திய பிரித்தானிய ஆட்சியை ஒழிப்பதற்கு வழிகாட்டியவர்களான எங்களுடைய தலைவர்களைத் தூக்கி வீசிவிட்டவர்கள் இந்த நாட்டின் பெரும்பான்மைத் தலைவர்கள் என்கின்ற அதே நேரத்தில் தமிழர்கள் தங்களுக்குரிய அரசியற் பலத்தை நாங்கள் ஒன்று சேர்வதன் மூலம் தான் பெற்றுக் கொள்ள முடியும் என்கின்ற விடயத்தை எமக்குக் காட்டியவர்களும் எமது சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம் ஆகியோர்தான்.

இந்த அடிப்படையில் இருந்து எமது கலைகள், மொழி, இனம், பிரதேசம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் எமது முன்னோர்கள் வழியில் நின்று நாங்கள் தமிழர்கள் என்ற வகையிலே ஒன்றிணைந்து வாழ்வதன் மூலம் தான் இந்த நாட்டிலே தமிழர்களுடைய இருப்பைக் காப்பாற்ற முடியும். அதன்மூலம் தான் எமது கலை, கலாச்சாரம், மொழி, இனம் என்பவற்றைக் காப்பாற்ற முடியும். இல்லையென்றால் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைபோல எமது இனத்தின் கதை மாறிவிடும் என்று தெரிவித்தார்.