இந்து உயரிய பல விடயங்களை ஆழமாகவும் அகலமாகவும் போதிக்கும் சமயம் - பேராசிரியர் வே.குணரெத்தினம்



இந்து ஆலயங்களை அமைத்து கும்பாபிஷேக பெருவிழாவை நடத்துவதன் மூலமும் வருடா வருடம் இந்து ஆலயங்கள் உற்சவப் பெருவிழாக்களை மேற்கொள்ளுவதன் மூலமும் இந்து மதத்தினைப் பாதுகாக்க முடியாது. மாறாக அவற்றுடன் இணைந்ததாக இந்து ஆலயங்கள் சமூகம் சார்ந்த சேமநலப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். என கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் வே.குணரெத்தினம் கூறியுள்ளார்.

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயம், களுதாவளை திருநீற்றுக்கேணி, சிவசக்தி ஸ்ரீ முருகன் ஆலயம் என்பவற்றின் அற்புதங்களையும் புகழையும் பறைசாற்றும் பாடல்கள் அடங்கிய 'மாங்கனி' என்னும் இறுவட்டு வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலயத் தலைவர் கா.வ.வேலாயுதப்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது. அதன்போதே பேராசிரியர் வே.குணரெத்தினம் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் பேசுகையில், இந்து மதமானது நல்லொழுக்கம், நல்லிணக்கம், சகோதரத்துவம் போன்ற உயரிய பல விடயங்களை ஆழமாகவும் அகலமாகவும் போதிக்கும் சமயமாகும். எமது இந்துசமயத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சகலவிதமான வழிபாட்டு முறைகளும், வணக்க முறைகளும் பக்தி பூர்வமாக இறைவனைத் துதிப்பதாக இருக்கலாம். இருந்தாலும் இவற்றுக்குள் விஞ்ஞான ரீதியிலான பல கருத்துக்கள் புரையோடிக்கிடக்கின்றன.

நாம் தோப்புக்கரணம் இட்டு இறையன்பைப் பெறுவதற்காக வழிபடுகின்றோம். தோப்புக்கரணம் போடும்போது தலையில் மூன்று முறை குட்டி இரண்டு காதுகளையும் பிடித்து வணங்குகின்றோம். அப்போது எமது ஞாபகசக்தி அதிகரிக்கின்றது. அதே போன்று நாம் விரதம் இருக்கும் போது உணவை தவிர்த்துக் கொள்கின்றோம். மனம், வாக்கு, காயம் என்பவற்றை ஒருநிலைப் படுத்துகின்றோம்.

இக்காலத்தில் நாம் இறையன்பைப் பெற்றாலும். எமது உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் எரிக்கப்படுகின்றது. இதுவும் விஞ்ஞான ரீதியிலான கருத்தாகும்.

காடுகள், மேடுகள், களனிகள் என்பனவற்றைக் கடந்து யாத்திரைகள் செய்கின்றோம் இதன்மூலம் இறையன்பு, பயபக்தி மனநிம்மதி கிடைத்தாலும் விஞ்ஞானரீதியில் எமக்கு மன அழுத்தம் குறைந்து உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகள் அகற்றப்படுகின்றது.

இதைவிட ஒரு நல்ல கருமம் செய்யும் போது வலது காலை எடுத்து வைத்து வா என்கின்றோம் இதன் வாயிலாக உலகம் வலது பக்கமாக சுழன்று கொண்டிருக்கின்றது என்ற தத்துவம் வெளிப்படுகின்றது.  சந்தனம், குங்குமம் நெற்றியில் வைக்கும் போது உடல் குளிர்ச்சியடைகின்றது. பெண்கள் காலில் மெட்டி அணியும்போது பெண்களின் கர்ப்பப்பை வலுவடைகின்றது, பாதுகாக்கப்படுகின்றது.

இவ்வாறு இந்துமத தத்தவங்கள் விஞ்ஞானத்துடன் பின்னிப்பிணைந்து மனித வாழ்வை மேன்மைபெற வைக்கின்றது. மனிதப் புனிதர்களை தோற்றுவிக்கின்றது. வாழ்வியல் அம்சங்களை சிறப்படையச் செய்கின்றது. எம்மத்தியில் இந்து ஆலயங்கள் எமது சமூகம் சார்ந்த விடையங்களில் கூடிய கவனம் எடுக்கவேண்டும்.

அதே போன்று அந்தணர்கள் இந்துமத தத்துவங்களை குறைந்தது ஐந்து நிமிடமாவது மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். எமது இந்துமதம் மூத்த மதம் என்று சொல்லிக்கொண்டு இருக்காமல் ஆலய அறங்காவல் சபைகள் தமது வருமானத்தின் ஒரு பகுதியையாவது சமூகத்தின் கல்வி, கலை, கலாசார விழுமியங்களுக்காக செலவீடு செய்ய வேண்டும்.

இத்தருணத்தில் களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய அறங்காவல் சபையினர் தமது ஆலயத்திற்கு கிடைத்த ஒன்பது இலட்சம் ரூபாவினை இப்பிராந்தியத்தின் கல்வி வளர்ச்சிக்காக செலவு செய்துள்ளமை எனக்க மகிழ்ச்சி தருகின்றது. இது காலத்தின் தேவை இது போன்று ஏனைய இந்து ஆலயங்களும் செயற்பட வேண்டும் என்றார்.