Saturday, June 02, 2018

ஆளே நீங்க எவடம்? உங்கள் ஊருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது?

ads


( துலாஞ் ) 
வரலாறு, சரித்திரம் என்றெல்லாம் என்னென்னவோ எல்லாம் ஆராய்கிறோம். ஆனால் மிகச்சிறிய விடயம் கூட, பென்னம்பெரிய வரலாற்றைக் கொண்டிருக்கலாம். அவ்வளவு ஏன், உங்கள் ஊரின் பெயரை யோசித்திருக்கிறீர்களா? அதுவே ஆயிரம் கதை சொல்லும்.


தொன்மங்கள் வேறுபட்டாலும், பொதுவாக ஊர்கள், இயற்கைக் காரணிகளை மையமாகவே வைத்தே தோற்றம் பெறுகின்றன. மரமோ, புவியியல் அமைப்பொன்றோ காரணமாக பெயர் பெறாத ஊர்கள் மிகக்குறைவு. இப்படிப் பெயர் பெற்றிருக்கின்ற மட்டு-அம்பாறை மாவட்டங்களின் முக்கியமான சில ஊர்களை மாத்திரம் இங்கு பார்க்கலாம்.

பழைய மட்டக்களப்பின் (சம்மாந்துறை) எல்லையான செங்கற்படை ஆற்றின் அக்கரையில் இருந்த பற்று (நிர்வாகப்பிரிவு) ஆதலால் அக்கரைப்பற்றுக்கு அந்தப்பெயர் வந்தது. இந்தப் பற்றின் தலைமை நகரே இன்றைய அக்கரைப்பற்று நகர். அதன் பழைய பெயர் கருங்கொடித்தீவு. கருங்கொட்டி என்றால் ஒருவகை நீர்க்கிழங்கு. அதுபோல, சேனைக்காவலில் பயன்படும் உயரமான காவலரண் 'அட்டாளை' என்று அழைக்கப்படும். அட்டாளை அமைந்திருந்த சேனை அட்டாளைச்சேனை. அது முன்பு சின்ன முல்லைத்தீவு என்று அழைக்கப்பட்டது. ஆரையம்பதி முன்பு ஆரப்பற்றை என்று அழைக்கப்பட்டது. இயற்கையாக நீரோடும் ஓடையை “ஆரப்பற்றை” என்று சொல்லும் மட்டக்களப்புத் தமிழ். சிலர், ஆரை எனும் கீரை வளர்ந்த இடம் என்று சொல்லுவார்கள்.

சம்மாந்துறை என்பது சம்பான்துறை என்ற பெயர் மருவி உருவானது. சம்பான் என்றால் சிறுபடகுகள். பழைய மட்டக்களப்பு நகர் சம்மாந்துறையில் அமைந்திருந்தபோது, வாவி வழியே வாணிகம், போக்குவரத்தில் ஈடுபட்ட சம்பான்கள் தரித்த துறை என்பதால் இது சம்பாந்துறை. (தெற்கேயுள்ள அம்பாந்தோட்டையும் இதேதான்; சம்பான்+தோட்டம்= ஹம்பாந்தோட்ட என்று சிங்களத் தோற்றம் காட்டும்.)

வில் என்றால் ஈழத்தமிழில் சிறுகுளம் என்றும் பொருள். கிழக்கில் அப்படி சிறுகுளங்களை அண்டி உருவான நிறைய ஊர்கள் வில் என்ற பெயரைக் கொண்டிருக்கின்றன. ஒலுவில் முன்பு "ஒல்லிவில்" என்று இருந்தது என்கிறார்கள். ஒல்லி ஒருவகை நீர்த்தாவரம். ஒலு என்றால் தாமரை என்ற சிங்களச்சொல்லை வைத்து, அது சிங்கள ஒலுவில என்பாரும் உண்டு. கோளாவில் என்னும் ஊர்ப்பெயர் கூழாவில்லிலிருந்து திரிந்திருக்கக்கூடும். கூழா என்பதும் ஒருவகை மரம் (Cordia spp.). அதேபோல் பொத்துவில் என்ற பெயருக்கு புற்றுவில், பொதுவில், போதிவில் (போதி - அரசமரம்) என்றெல்லாம் வேர்ச்சொல் காணலாம்.

மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம் சொல்வது போல், தம்பதி நல்லாள் எனும் சோழ இளவரசியின் பெயரால் அமைக்கப்பட்ட ஒரு வில் தான் தம்பதிவில். இன்று தம்பிலுவில் என்று அழைக்கப்படுகின்றது. தம்பலிவில்லிலிருந்தோ (தம்பலி - மருதமரம்) சிங்கள தெம்பிலிவில்லிலிருந்தோ (தெம்பிலி - செவ்விளநீர்) கூட அப்பெயர் வந்திருக்கக்கூடும்.
எருவில் எருக்கு தாவரத்தாலோ இறைப்பதாலோ அப்பெயரைப் பெற்றிருக்கலாம். ஏதோ வரி (இறை) பெற்ற ஊர் இறைக்காமவில் ஊர். இன்றைய இறக்காமம். காமம் என்றால் வேளாண்மை (கமம்) சார்ந்த ஊர். பழுகாமம், பழுவன் எனும் வேடனால் பெயர்பெற்றது என்கிறார்கள்.

மருதமரம் இலங்கையில் பரந்து காணப்படும் தாவரங்களுள் ஒன்று. அதன் பெயராலேயே, மருதமுனை, சாய்ந்தமருது ஆகிய ஊர்கள் தோன்றின. மகிழமரத்தால், மகிழூர், மகிழடித்தீவு ஆகிய ஊர்களும், கிரான் எனும் புல்லால், கிரான், கிரான்குளம் ஆகிய ஊர்களும் முறையே அப்பெயர்களைப் பெற்றன. இப்படியே காரைமரங்கள் அடர்ந்த தீவு காரைதீவு என்றும், தேத்தாமரங்கள் நிறைந்த தீவு தேத்தாத்தீவு என்றும் இரு ஊர்கள் பெயர்களைப் பெற்றன.

பாலமுனை, குறிஞ்சாமுனை நொச்சிமுனை, வீரமுனை ஆகிய ஊர்கள், முறையே பாலை, குறிஞ்சா, நொச்சி, வீரை ஆகிய மரங்கள் நிறைந்து காணப்பட்ட முனைகள். இவற்றில் வீரமுனை என்பது, பழைய மட்டக்களப்பு அரண்மனையின் காவல்வீரர்கள் நின்ற வீரர்முனை என்று சொல்கிறது பூர்வசரித்திரம்.

கொக்குநெட்டி எனும் மரங்கள் அடர்ந்த சோலை கொக்கட்டிச்சோலை. மண்டு மரம் நிறைந்த ஊர் மண்டூர். வம்மி மரமருகே மடுவொன்றைக் கொண்டிருந்த வம்மிமடு எனும் கிராமம் பிற்காலத்தில் நிந்தவூர் என்று ஆனது. நிந்தம், கபாடகம் என்பன, கண்டி அரசின் காலத்தில் அரசால் மக்களுக்கோ, தனிநபர்களுக்கோ ஏகபோக உரிமையாக வழங்கப்பட்ட நிலங்களாகும். நிந்தவூர் அருகே அட்டைகள் நிறைந்த பள்ளம் அட்டப்பள்ளம் என்று ஆனது.

கல்லாறு என்றால் கற்கள் நிறைந்த ஆறு. பெரிய கல்லாறு, சின்னக்கல்லாறு எனும் இரு ஊர்கள் ஆற்றின் கரைகளில் உருவாகின. சின்னக்கல்லாற்றில் ஒல்லாந்தர் கோட்டை கட்டியபிறகு, அது கோட்டைக்கல்லாறு என்று ஆனது. மட்டக்களப்பு வாவி(கடலேரி)யை ஆறு என்று பேச்சுவழக்கில் குறிப்பிடுவது வழக்கம்.

மாட்டுப்பட்டிகள் இருந்த பகுதி பட்டிருப்பு என்றும், பாண்டவருக்குக் கோயில் இருந்த பகுதி பாண்டிருப்பு என்றும் பெயர் பெற்றது. காத்தான் குடியிருந்த இடம் காத்தான்குடியிருப்பு. கலைவஞ்சி குடியிருந்த இடம் களுவாஞ்சிக்குடியிருப்பு. சித்தாண்டி எனும் சித்தர் ஒருவர் குடியிருந்த இடம் சித்தாண்டிக்குடியிருப்பு. முருகன் அல்லது ஆறுமுகத்தான் எனும் பிரமுகர் குடியிருந்த இடம் ஆறுமுகத்தான்குடியிருப்பு. மண்முனையில் உருவான புதிய குடியேற்றம் புதுக்குடியிருப்பு. சேனைக்குடியிருப்பு, ஒரு சேனைக்கருகே உருவான குடியிருப்பு. வாழைச்சேனையும் அப்படித்தான். மாமரத்தடியில் உருவான பள்ளிவாசல், மாவடிப்பள்ளி. மரப்பொந்து ஒன்றைக்கொண்டிருந்த ஓட்டைமா அருகே உருவான குடியேற்றம் ஓட்டமாவடி.

களப்பு அல்லது கடலுள் நீண்டிருந்த நிலப்பகுதிகள் முனை எனப்படும். கல்முனை, மண்முனை, (முறையே கல்லும் மண்ணும் மண்டிக்கிடந்த முனைகள்) சொறிக்கல்முனை என்பது கனிமப்பாறைகளைக் கொண்டிருந்த முனை. நாப்பிட்டி(நா-நடு) முனை என்பதே பின்பு நற்பிட்டிமுனை ஆனது என்கிறார்கள். பிட்டி என்றால் பிட்டம் போல் பருத்திருப்பது, மேடாக இருப்பது என்று பொருள். மலுக்கம்பிட்டி (பூர்வசரித்திரத்தின்படி மண்கல்பிட்டி), மன்னன்பிட்டி (மனம்பிட்டி) என்பன பிட்டிகளால் பெயர் பெற்றவை.

நிலக்குறிகளாலும் சில ஊர்ப்பெயர்கள் தோன்றுவதுண்டு. திருக்கோவில், மட்டக்களப்பின் முதற்பெரும் தேசத்துக்கோவில் என்பதால் கோவில் "திருக்கோவில்", அது அமைந்த தலமும் அதே பெயர் பெற்றது. ஒல்லாந்தர் (அ.ஆங்கிலேயர்?) பண்டைய மட்டு.நகருக்கு முதன்முதலாக வந்து ஏறிய இடம் துரைவந்தேறியமேடு என்று அறியப்பட்டு, இன்று துரைவந்தியமேடு எனப்படுகின்றது. களுதேவாலயம் (பிள்ளையார் கோயில்) அமைந்த ஊர், களுதாவளை என்றாகியிருக்கலாம். களுவனின் தாவளம் என்றும் சொல்லப்படுகிறது. தாவளம் என்றால் தங்குமடம் என்றும் பொருள் உண்டு. களுவன் என்ற வேடனொருவனால் பெயர் பெற்ற இன்னொரு இடம் களுவன்கேணி. ஓந்தாஜ் எனும் ஒல்லாந்து அதிகாரி தங்கியிருந்த மடம், ஓந்தாச்சிமடம். சங்கமக்குருக்கள் தங்கியிருந்த மடம், குருக்கள்மடம். குருநாதமடம் என்றும் அது சொல்லப்படுகின்றது. இதேபோல் வீரசைவ சங்கமக்குருக்கள் வாழ்ந்த பதி, சங்கமன்கண்டி. அவர்கள் "தம்பட்டர்" என்று வாழ்த்தப்பட்டு குடியேற்றப்பட்டதாக சொல்லப்படும் ஊர், இன்று தம்பட்டை என்று அழைக்கப்படுகின்றது.

திமிலர் துரத்தப்பட்ட தொன்மத்துடன் தொடர்புடைய ஊர், திமிலதீவு. அவர்கள் சந்தித்த வெளி, சந்திவெளி என்றும், அவர்கள் ஏறாது - தாண்டிவராது நின்றவூர் ஏறாவூர் என்றும், அவர்களை வென்ற வீரர்கள் வந்தாறிய இடம், வந்தாறுமூலை என்றும் தொன்மங்கள் சொல்கின்றன. எனினும் சில ஒல்லாந்துக் குறிப்புகளில், வந்தாறுமூலை, "பண்டாரமூலை" எனப்படுகின்றது. பண்டாரம் - கோயில் திருத்தொண்டர்கள், தவசிகளைக் குறிக்கும்.

செட்டிபாளையம், தமிழ்நாட்டுச் செட்டிமார் பாளையமிட்டு குடியிருந்த இடம். சவளக்கடை – பண்டைய மட்டு.நகரின் அருகிருந்த வர்த்தகக் குடியிருப்பு. ஜவுளிக்கடை என்றோ சவளை மீன் கடை என்றோ விரித்துப்பார்க்கலாம். பாலமீன்மடு, பாலை மீன்கள் நிறைந்திருந்த மடு. குறு(கிய) மணல் கொண்ட வெளி குருமண்வெளி. வேலாயுதரின் வெளி, வெல்லாவெளி.

இப்பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். இந்தக்கட்டுரையில் சொல்லப்பட்டதற்கு வெளியே இன்னும் நிறைய ஊர்கள் இருக்கின்றன. உங்கள் சொந்தவூருக்கு வேறேதும் பெயர்க்காரணம் இருக்கலாமா, அல்லது வேறேதும் மரபுரைகள் இருக்கின்றனவா என்பதை ஒருதடவை சிந்தித்துப்பாருங்கள். அந்தச்சிந்தனையே நிறைய வரலாற்றுக்கதவுகளைத் திறந்துவிடக்கூடும்.


ஆளே நீங்க எவடம்? உங்கள் ஊருக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? Rating: 4.5 Diposkan Oleh: BATTINEWS MAIN
 

Top