மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மாணவி கராத்தேயில் சாதனை !!



கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2018 ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண பாடசாலை விளையாட்டு விழாவில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மகாஜன கல்லூரி மாணவி குககுமாரராஜா ஜனோஜா 16 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கராத்தே Kumite (குமிற்றி) போட்டியில்  பங்குபற்றி கிழக்கு மாகாணத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

பெண் பிள்ளையாக இருந்த போதும் இத் தற்பாதுகாப்பு கலையில் ஆர்வம் செலுத்தி  கராத்தேயில் கறுப்புப் பட்டியைப் ( Black Belt) சிறு வயதிலே பெற்றிருப்பது சிறப்பம்சமாகும். 

இதே வேளை இவ் விளையாட்டு விழாவில் இருபது வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான KATA (காட்டா ) போட்டியில் இவரது மூத்த சகோதரன் குககுமாரராஜா ஜனோஜன் கிழக்கு மாகாணத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். 

அண்ணன், தங்கை இருவரும் இந் நிலையினை எட்டுவதற்கு வழிகோலியது இவர்களது தந்தையாரே ஆவார். தந்தை K. குககுமாரராஜா (B.Sc, M.Sc) அவர்களும் கராத்தேயில் கறுப்பு பட்டியினைப் பெற்றிருப்பதுடன், கராத்தே நடுவராகவும், பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார், இவர் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் கணித ஆசிரியராக கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.