மட்டக்களப்பில் பிரதமர் தலைமையில் பல அபிவிருத்தி திட்டங்கள்


மட்டக்களப்பு மாவட்டத்தின் பல அபிவிருத்தித்திட்டங்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் 29ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எதிர்வரும் 29 ஆம் திகதி மட்டக்களப்புக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அன்றைய தினம் முற்பகல் 10 மணிக்கு ஆரையம்பதியில் சுமார் நாலு கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ள மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திற்கான புதிய மாடிக் கட்டடத் தொகுதியை வைபவ ரீதியாக திறந்து வைக்கவுள்ளார். அத்துடன் , அரச உத்தியோகத்தர்களுக்கு அலுவலகப்பைகளை வழங்குவதுடன், வறிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகளையும் வழங்கி மர நடுகையிலும் பங்கு கொள்ளவுள்ளார்.

மேலும், ஏறாவூர் நகரில் புதிதாக சுமார் நாலரைக்கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பிரதேச செயலகத்திற்கான புதிய 3 மாடிக் கட்டடத்தை திறந்து வைப்பதுடன், அரச உத்தியோகத்தர்களுக்கான அலுவலகப் பைகள் மற்றும் வறிய மக்களுக்கு வாழ்வாதார உதவிகளையும் வழங்கவுள்ளதுடன் மரநடுகையும் இடம்பெறவுள்ளது.

பிரதமரின் இந்த உத்தியோக பூர்வ விஜயம் தொடர்பாக ஏற்பாடுகளைத்திட்டமிடும் விசேட கூட்டம் ஒன்று நேற்று மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, குறித்த விஜயத்தின் போது நடைமுறைப்படுத்தவுள்ள திட்டங்களின் முன்னோடி ஏற்பாடுகள் பற்றியும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இக்கூட்டத்தில் அரசியல் பிரமுகர்களின் பிரதிநிதிகள், முப்படைகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மற்றும் திணைக்களத் தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.