நுண்கடன் பிரச்சனை தொடர்பில் ஆராய மாநகர உறுப்பினர்கள் குழுவொன்றை நியமித்துள்ளோம் - முதல்வர் சரவணபவன்



கடந்த காலம் போல் இல்லாமல் நடக்கும் விடயங்கள் சரியாகவும், நேர்மையாகவும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கட்சி பேதமின்றி அபிவிருத்திகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அத்துடன் தற்போது பாரிய பிரச்சனையாக உள்ள நுன்கடன் பிரச்சனை தொடர்பில் ஆய்வினை மேற்கொள்வதற்கு குழுவொன்றை அமைத்துள்ளோம் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.

மாநகரசபை 08வது அமர்வின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாம் எமது மாநகரத்தின் அபிவிருத்திக்காகப் பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம். அண்மையில் எமது மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜப்பானியத் தூதுவரிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். அவர் தன்னாலான உதவிகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார். அதன்படி பெண்கள் சிநேக நகர திட்ட முன்மொழிவொன்றினை செயற்படுத்தி அதற்கான நிதி மூலங்களை ஜப்பான் அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ள முடியும்.

அது மட்டுமல்லாது எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவியோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களிடமும் பல்வேறு செயற்திட்டங்கள் தொடர்பில் கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம். எமது பாராளுமன்ற உறுப்பினர்களுடாக எமது மாநகர அபிவிருத்திக்கு மேலதிக நிதியினைத் தருவதாக அவர் உறுதியளித்தள்ளார்.

அத்துடன் நேற்றைய தினம் மடடக்களப்பிற்கு விஜயம் மேற்கொண்ட வீடமைப்பு நிர்மானத்துறை அமைச்சர் சஜித் பிறேமதாச அவர்களுடன் கலந்துரையாடி 90 வீடுகள் கொண்ட ஒரு கட்டிடத் தொகுதி அமைப்பதற்குரிய ஒப்புதலைப் பெற்றுள்ளோம். இதற்கான நிதி மூலங்களை வெகு விரைவில் அவர் வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறன செயற்பாடுகளை இக்காலப் பகுதிக்கான எமது வெற்றிச் செயற்பாடுகளாகக் கருத முடியும்.

தற்போது நுண்கடன் தொடர்பிலான பிரச்சனை எமது மாவட்டத்தில் பல்விதமாக உள்ளது. அது தொடர்பில் ஆய்வினை மேற்கொள்வதற்கும் நுன்கடன் தொடர்பான பிரச்சனைகளை தீர்ப்பதற்குமாக ஒரு குழுவினை நியமித்து அக்குழுவின் ஆய்வறிக்கை மூலம் இப்பிரச்சனைக்குரிய தீர்வுகளுக்கான அடுத்த நகர்வுகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். அக்குழு இன்னும் ஒரு மாத காலத்திற்குள் இதற்கான ஆய்வறிக்கையை எமது சபைக்கு சமர்ப்பிக்கும் வகையில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அத்துடன் மாநகர சபையில் முன்மொழிவுகள் பிரேரணைகளை வழங்கி அதனை சபையில் நிறைவேற்றி விடுவதோடு உறுப்பினர்களின் செயற்பாடுகள் நின்று விடக் கூடாது. முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை நடைமுறைக்கு கொண்டு வருவதற்குரிய பாரிய பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் இருக்கின்றது. அந்தவகையில் ஒவ்வொரு பிரேரணைகளுக்கும் சொந்தக் காரர்களான உறுப்பினர்கள் அந்தப் பிரரேணைகளை நடைமுறைப்படுத்தும் தொடர் செயற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் நடைபெற்ற நடைமுறைகள் தொடர்பில் கதைத்து காலத்தைக் கடத்துவதற்கு எனக்கு உடன்பாடு இல்லை. கடந்த காலங்களில் எவ்வளவு நிதி வந்தது எங்கிருந்து வந்தது எவ்வாறு செலவழிக்கப்பட்டது என்பது பற்றி அனைவருக்கும் தெரியும். எனவே கடந்த காலம் போல் இல்லாமல் தற்போது நடக்கும் விடயங்கள் சரியாகவும் நேர்மையாகவும் நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. கட்சி பேதமின்றி அபிவிருத்திகள் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

எங்களது செயற்பாடுகளில் ஒற்றுமை இருக்கின்றது. அந்த ஒற்றுமையைக் குலைப்பபவர்களுக்கு எதிராக எமது மாநகரசபையின் நியதிச் சட்டங்களுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

அபிவிருத்தியை மாநகர நிதி நிலைமைகளை கவனத்திற்கொண்டே மேற்கொள்ள முடியும். அந்த வகையில் மாநகரத்தின் வரவுகளை பெற்றுத் தருவதிலும் உறுப்பினர்களுக்குப் பங்குண்டு. வெறுமனே மாநகர முதல்வரிடமோ, நிர்வாகத்திடமோ செயற்பாடுகளை கையளித்து விட்டு இருந்து விடாமல் ஒவ்வொரு உறுப்பினரும் செயற்பாட்டாளர்களாக மாற வேண்டும் எனவும் தெரிவித்தார்.