தொடரூந்து சேவைகள் முற்றாக ஸ்தம்பிப்பு


தொடரூந்து பணியாளர்கள் நடத்துகின்ற தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இன்றையதினம் எந்தவொரு தொடரூந்து சேவையும் இடம்பெறவில்லை என்று தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் தொடரூந்து பணியாளர்களின் தொழிற்சங்களுக்கு இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

இதன்போது இந்த போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்பது குறித்தும், பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

தொடரூந்து பணியாளர்களது பல தொழிற்சங்கள் நேற்று பிற்பகல் முதல் திடீர் போராட்டத்தை நடத்த ஆரம்பித்தனர்.

இதனால் நேற்று கோட்டை தொடரூந்து நிலையத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தி இருந்தனர்.

தங்களது பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி இணங்கப்பட்ட விடயங்கள் அமுலாக்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடரூந்து பணியாளர்கள் இந்த போராட்டத்தை நடத்துகின்றனர்.

இந்தநிலையில் இன்றையதினம் ஒய்வு பெற்ற இயந்திர சாரதிகளை இணைத்துக் கொள்ள போக்குவரத்து அமைச்சு தீர்மானித்திருந்தது.

அத்துடன் அரச பேருந்து பணியாளர்களின் விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டதுடன், தொடரூந்து பருவச் சீட்டுகளைக் கொண்டுள்ளவர்கள் பேருந்துகளில் பயணிக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டது.