அம்பாறை கனகர் கிராமம் காணிகளை விடுவிப்பதற்கு தயக்கம் ஏன்?


 அம்பாறை மாவட்டத்தின் தென்பகுதியிலுள்ள பொத்துவில் 60ஆம் கட்டை கனகர் கிராம தமிழ் மக்களது காணிமீட்புப் போராட்டம் இன்று 17ம் திகதி திங்கட்கிழமை 35வது நாளாகத் தொடர்கிறது.
தாம் பூர்வீகமாக வாழ்ந்து வந்த நிலத்தை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரி இவர்கள் கடந்த 35 தினங்களாக வீதியோரத்தில் முகாமிட்டு, வெயிலிலும் பனியிலும் இரவுபகலாக மனவைராக்கியத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் மற்றும் சமுகசேவையாளர்கள் எனப் பலரும் வந்து இம்மக்களுடன் கலந்துரையாடி பல உறுதிமொழிகளை அளித்துள்ளார்கள். வனத்துறை உயரதிகாரியும் இக்காணியை மீளளிக்க உறுதி கூறியுள்ளார். ஆனால் எதுவுமே ஈடேறவில்லை. இந்நிலையில் இம்மக்களின் போராட்டம் இன்றுடன் 35வது நாளாகத் தொடர்கிறது.
கடந்த 13ஆம் திகதி வியாழக்கிழமை அம்பாறை கச்சேரியில் நடைபெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் இறுதி நேரத்தில், நிகழ்ச்சிநிரலில் இல்லாமல் கனகர்கிராம விவகாரம் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பொத்துவில் கனகர்கிராம தமிழ் மக்களுக்காக சிங்கள அரசியல் பிரமுகர் சந்திரதாச கலப்பதி முன்மொழிய அதனை முஸ்லிம்அரசியல் பிரமுகர் உதுமாலெவ்வை வழிமொழிந்து உரக்கக் குரல்கொடுத்தார்.
அங்கு இடம்பெற்ற கலந்துரையாடலின்படி பொத்துவில் கனகர் கிராம போராட்டம் இவ்வாரம் நிறைவடையக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அரசாங்கஅதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க முன்னிலையில் நடைபெற்ற போது, இணைத்தலைவரான கிழக்கு மாகாணசபையின் முன்னாள் தவிசாளர் சந்திரதாச கலப்பதி, பொத்துவில் 60ஆம் கட்டை கனகர்கிராம தமிழ் மக்களின் போராட்டம் பற்றியும் அவர்களது காணி விடுவிக்கப்பட வேண்டும் என்றும் பிரஸ்தாபித்து உரையாற்றினார்.
அன்றைய கூட்ட நிகழ்ச்சிநிரலின்படி அனைத்தும் நடைபெற்று முடிந்து நன்றியுரை கூற இருந்த வேளையில் இணைத் தலைவர் சந்திரதாச கலப்பதி அங்கு திடீரென இதனைப் பிரஸ்தாபித்தார்.
"கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக பொத்துவில் கனகர் கிராம தமிழ் மக்கள் தாம் வாழந்த காணியைப் பெறுவதற்காகப் போராடி வருகின்றார்கள். அவர்கள் அந்த இடத்தில் வாழ்ந்து வந்ததை நான் நன்கு அறிவேன். யுத்தசூழ்நிலை காரணமாக அவர்கள் இடம்பெயர நேரிட்டது. அதனால் அப்பகுதி இன்று காடுமண்டிக் கிடக்கிறது. இன்றும் அவர்கள் வாழ்ந்த வீடுகள் மலசலகூடங்கள் உடைந்து தகர்ந்து கிடப்பதைக் காணலாம். இதை விட என்ன ஆதாரங்கள் வேண்டும்? அவர்களது காணிகளை ஏன் விடுவிக்க முடியாது? விடுவிக்காமைக்கான காரணம் என்ன?" என்று அவர் கேள்வியெழுப்பினார்.
அதற்குப் பொறுப்பான வனவள அம்பாறை மாவட்ட அதிகாரி முனசிங்க பதிலளிக்கையில்
"நாம் அது தொடர்பான எமது அறிக்கையை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளோம். அங்கிருந்து பதில் வந்ததும் மேலதிக நடவடிக்கையை மேற்கொள்வோம்" என்றார்.
இச்சமயத்தில் இடைமறித்த க.கோடீஸ்வரன் எம்.பி, தான் இது தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசியுள்ளதாகவும் அவரிடமிருந்த பதில் வெள்ளிக்கிழமை அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இணைத்தலைவர் உதுமாலெவ்வை கூறுகையில்,"அந்த இடத்தில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்ததை நான் அறிவேன். அதற்கு நானும் சாட்சி. இங்கு சிங்கள மக்கள் சார்பில் கலப்பதியும் முஸ்லிம் மக்கள் சார்பில் நானும் சாட்சி பகர்கின்றோம். அதை விட இந்த டி.சி.சி தீர்மானமும் உள்ளது. இதை விட இன்னும் என்ன தேவை? எனவே அந்தக் காணியை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
முன்னாள் அமைச்சர் உதுமாலெவ்வையின் மனிதாபிமான, தார்மீகமான, இனமதபேதமின்றி குரல்கொடுக்கின்ற போக்கு பாராட்டப்படக் கூடியது. இந்த விடயத்தில் மட்டுமல்ல திருக்கோவில் ஆததார வைத்தியசாலை அபிவிருத்தி விடயத்திலும் அவர் குரல் கொடுத்தார். தேவையான போது நல்ல சிங்களத்திலும் மற்ற நேரத்தில் தமிழிலும் துணிந்து இனமதபேதமற்றுக் குரல் கொடுத்து வருகிறார்.
அங்கு இடம்பெற்ற கருத்தாடலைப் பார்த்த போது இவ்விவகாரம் இவ்வாரத்தில் முடிவுக்குக் கொண்டு வரப்படலாம் என்ற நம்பிக்கை எழுகின்றது. ஏனெனில் இதுவிடயத்தில் அங்கு கலந்துரையாடிய அரசியல் பிரமுகர்களும் சரி, அதிகாரிகளும் சரி மக்களுக்குச் சாதகமாகக் கருத்துக்களைப் பகிர்ந்ததைக் காண முடிந்தது.
இதேவேளை நேற்றுமுன்தினம் 4வது தடவையாக அங்கு விஜயம் செய்த காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில், அம்மக்களுக்கென மேலுமொரு தனியாக தகரக்கொட்டிலொன்றை அமைக்க உதவியதோடு சில உதவிகளையும் செய்தார். பொத்துவில் பிரதேசசபை உபதவிசாளர் பெருமாள் பார்த்தீபனும் ஒரு கொட்டிலை அமைத்துக் கொடுத்துள்ளார். பொத்துவில் பிரதேசசபை 24மணிநேரமும் தண்ணீர்வவுசரை நிறுத்தி குடிநீரை வழங்கி வருகிறது.
ஜெயசிறில் அங்கு கூறுகையில் "நல்லாட்சியைக் கொண்டு வந்த தமிழ் மக்கள் இன்று நடுத்தெருவில் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையிலுள்ளனர். அவர்களுக்கு நல்ல தீர்வை வழங்கி போராட்டத்தை அரசு முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இங்கு ஒரு மாதகாலத்திற்கும் மேலாக மக்கள் போரா டி வருகின்ற போதிலும் இன்னும் தீர்வு கிடைக்காதது வேதனைக்குரியது. நாதியற்ற சமூகமாக தமிழ்ச் சமூகமிருப்பதை இந்த சம்பவம் சுட்டிக்காட்டுகிறது.என்றார்.அங்கிருந்த மக்கள் கூறுகையில் "எமது போராட்டம் ஆரம்பமாகி ஒருமாத காலத்தைத் தாண்டியுள்ளது. இதுவரை எந்தவிதமான தீர்வும் கிடைக்கவில்லை. அதற்காக நாம் சலிக்கவில்லை. சளைக்கவில்லை.எமது அரசியல்வாதிகள் வெறும் அறிக்கைமன்னர்களாக உள்ளனரே தவிர எதையும் சாதித்தாகத் தெரியவில்லை. தமிழ் மக்களுக்காக சிங்கள, முஸ்லிம் அரசியல் சகோதரர்கள் குரல் கொடுக்கிறார்கள். நன்றிகள். எமது தமிழ் அரசியல்வாதிகளும் தூங்குகின்றார்களா என்று எண்ணத் தோன்றுகின்றது.
34நாட்களல்ல 340 நாட்கள் சென்றாலும் இந்த இடத்திலேதான் இருப்போம். எதுவரினும் நாம் செத்தாலும் இந்த இடத்திலே சாவோமே தவிர நிலத்தை மீட்கும்வரை எமது போராட்டம் ஓயாது" என்றனர்