அக்கரைப்பற்று ராம் கராத்தே சங்கத்தின் தரப்படுத்தல் நிகழ்வு


ராம் கராத்தே சங்கத்தின் அக்கரைப்பற்று கிளைக்கான தரப்படுத்தல் பரீட்சை கடந்த ஞாயிறன்று (16) அக்கரைப்பற்று இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றிருந்தது.

ஆலையடிவேம்பு பிரதேச செயலக பதவிநிலை உதவியாளரும், ராம் கராத்தே சங்கத்தின் ஸ்தாபகத் தலைவரும், பிரதம போதனாசிரியருமான சிகான் கே.ஹேந்திரமூர்த்தியின் தலைமையில் இடம்பெற்ற இத்தரப்படுத்தல் நிகழ்வில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரி, இராம கிருஸ்ண மிசன் மகா வித்தியாலயம், திருநாவுக்கரசு வித்தியாலயம், கண்ணகிபுரம் கண்ணகி வித்தியாலயம் என்பவற்றிலிருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

குறித்த பாடசாலைகளின் மாணவர்களுக்கான செய்முறைப் பயிற்சியாளர்களாக கென்சி கே.ராஜேந்திர பிரசாத் (ராமிலன்) மற்றும் திருக்கோவில் பிரதேச செயலக விளையாட்டு உத்தியோகத்தர் கென்சி கே.சாரங்கன் ஆகியோர் கடமையாற்றியிருந்த இத்தரப்படுத்தல் நிகழ்விற்குப் பிரதம விருந்தினராக ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளரும் கறுப்புப் பட்டியில் 3 ஆவது DAN ஐப் பெற்றவருமான கென்சி ரி.கஜேந்திரனும், கௌரவ விருந்தினராக ஓய்வுநிலை அதிபர் கென்சி கே.சந்திரலிங்கமும் (Black Belt 5th DAN), விசேட அதிதிகளாக ராம் கராத்தே சங்கத்தின் இலங்கைக்கான செயலாளர் கென்சி எம்.பி.செய்னுல் ஆப்தீன் (Black Belt 5th DAN), மட்டக்களப்பு கிளையின் போதனாசிரியர் கென்சி ரி.வேள் (Black Belt 5th DAN), கல்முனை கிளையின் போதனாசிரியர் கென்சி எம்.முரளீஸ்வரன் (Black Belt 5th DAN), கென்சி ரி.உதயகுமார், கென்சி ரி.பாலகிருஷ்ணன், கென்சி எம்.ரவிகரன், கென்சி எம்.திருக்குமார் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வின்போது இவ்வருடம் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே சுற்றுப்போட்டிகளில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்த ராம் கராத்தே சங்க மாணவர்களான பி.சரோன் சச்சின் மற்றும் எஸ்.ஏ.சராஜ் மொகமட் ஆகியோர் விருந்தினர்களால் அங்கு பாராட்டிக் கௌரவிக்கப்பட்டனர்.