கிழக்கு மாகாண ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் அவர்களுக்கு மட்டக்களப்பில் பாராட்டு

(சித்தா)
கிழக்கு மாகாண ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. பூ. உதயகுமார் அவர்களின் பணி ஓய்வு முன்னிட்டுப் பாராட்டு முகமாக ஒன்று கூடல் ஒன்றினை மட்டக்களப்பு மாவட்டக் கல்வி வலயங்களின் ஆரம்பக் கல்விப் பிரிவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த வகையில் இன்று ( 15.09.2018) மட்/செங்கலடி மத்திய மகாவித்தியாலயத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது கிழக்கு மாகாண ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. பூ. உதயகுமார் அவர்களின் சேவையினைப் பாராட்டி பாராட்டு மடல் வாசித்து கையளிக்கப்பட்டதுடன் மாலையணிவித்து பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.
கிழக்கு மாகாணத்தின் ஆரம்பக் கல்வியின் வளர்ச்சிக்காக பெரும் பாடுபட்டுழைத்து இன்று அரச கொள்கைகளுக்கு அமைவாக ஓய்வு பெறும் வயதிற்கு முன்னர் ஓய்வு பெற்றுச் சென்றுள்ளார். இருப்பினும் இவரின் சேவையானது ' அனைத்துச் சிறுவர்களும் தேர்ச்சி மட்டத்தினைப் பூர்த்தி செய்தல்' செயல் திட்டத்தின் ஆலோசகராக இருந்து கடமையாற்றி வருகின்றமை பாராட்டத்தக்க விடயமாகக் காணப்படுகிறது.
கிழக்கு மாகாணத்தின் சகல வலயங்களின் ஆரம்பக் கல்வித் துறையினை வளர்த்தெடுப்பதற்காக மாகாணக் கல்விப் பணிப்பாளருடன் இணைந்து பல்வேறு திட்டங்களை முன்வைத்து அதற்காக தன்னையே அர்ப்பணித்து சேவையாற்றியவராகும். நவீன தொழில்நுட்பங்களை மாணவர்கள் மத்தியில் எடுத்துச் செல்வதற்கு முன்னர் ஆரம்பக் கல்வி உத்தியோகஸ்த்தர்களை நவீன தொழில் நுட்பத்தின்பால் இட்டுச் செல்லும் முயற்சியிலும் முன்னின்று உழைத்தவர். எனப் பலரும் இன்றைய பாராட்டு நிகழ்வில் திரு.பூ. உதயகுமாரின் சேவையினைப் பாராட்டி நின்றனர். அத்துடன் இவரின் காலம் ஆரம்பக் கல்விச் செயற்பாடுகளின் பொற்காலம் எனவும் எடுத்துரைத்தனர்.
இந் நிகழ்வில் தனது மனைவி, பிள்ளைகளுடன் கலந்து கொண்டமையானது இவரின் பெரும்தன்மையினையும் எடுத்துக் காட்டுகிறது எனவும் குறிப்பிட்டனர்.