எனது அம்மாவை அவமானப்படுத்தாதீர்கள் தாங்கிக் கொள்ள முடியவில்லை ! பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர

அனைவருக்கும் நான் பதவி விலகவேண்டும் என்பதே தேவையெனின் நான் விடைபெறுவதே சிறந்ததாகும்.” என பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


பொலிஸ் மாஅதிபர் புஜித் ஜயசுந்தர தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதோடு, ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என அனைத்திலும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து பொலிஸ் மாஅதிபர் புஜித் ஜயசுந்தரவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

இவ்வாறான நிலையில், பொலிஸ் மா அதிபர் புஜித் ஜயசுந்தர கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள பத்திரிகையொன்றுக்கு நேற்று வழங்கியுள்ள செவ்வியில் கூறியதாவது,

இதுவரை சேவையில் இருந்தது போதும் என்று தோன்றுகின்றது. நான் கடந்த 33வருடங்களாக பொலிஸ் திணைக்களத்தில் நேர்மையாக கடமையாற்றியுள்ளேன்.

யாரிடமிருந்தும் ஒரு கல்லைக் கூட இதுவரை நான் பெற்றதில்லை. என்னை அறிந்தவர்கள் இதனை அறிவார்கள். நான் மனிதர்களையும், சுய மரியாதையையும், பெயரையும் மாத்திரமே சம்பாரித்துள்ளேன். இவ்வாறு நேர்மையாக தொழில் புரியும் போது கிடைப்பது கற்களாயின் நான் தொடர்ந்து சேவையிலிருந்து பயனில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் குறிப்பிடுகையில் தற்போது எனக்கு மீதமிருப்பது எனது அம்மாவின் அன்பும், குடும்பத்தின் பாசமும் தான். சிலர் எனது அம்மாவின் முகத்தை வெட்டி வேறு உடலுடன் இணைத்து முகப்புத்தகத்தில் பதிவேற்றி அவமதிப்பு செய்தனர். என்னைத் தவறான முறையில் பயன்படுத்துவதையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியும் ஆனால் எனது அம்மாவை அவமதித்ததை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

நான் ஒரு திருடனோ, ஊழல்வாதியோ அல்லது மோசடியாளனோ இல்லை. இவ்வாறு திருடன் எனும் முத்திரையை குத்தி வருகின்ற நிலையில் நான் தொடர்ந்து பாதுகாத்து வந்த சுய மரியாதைக்கு என்ன நேரும்?

யாரும் நம்பமாட்டார்கள். எனக்கென சொந்த வீடு இல்லை. வாடகைக்கேனும் நான் ஒரு வீடை தேடிக்கொள்ள வேண்டும். எனது பிள்ளைகள் வாழ்வதற்கு ஒரு இடம் வேண்டாமா? எனக் கேட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்துத்தெரிவிக்கையில்,

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி என்னிடம் இதுவரையிலும் கோரிக்கை விடுக்கவில்லை. எனினும் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் எச்சரிக்கை எனக்கு விளங்கியது. ஜனாதிபதி மற்றும் பிரதமரிடையே என் மீது ஏமாற்றமொன்று இருக்குமானால் நான் இந்த பதவியிலிருந்து எந்தவொரு பயனும் இல்லை.

எனினும் நாடாளுமன்றில் ஆலோசனை முன்வைக்காமல் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து நீக்க முடியாது என ஒரு சிலரும், முடியும் என ஒருசிலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த கதைகள் எனக்கு அவசியமில்லை. நான் பதவியிலிருந்து சென்றால் அனைத்தும் முடிந்துவிடும்.” எனத் தெரிவித்தார்.