ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற வாணி விழா நிகழ்வுகள்


ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடாத்திய இவ்வாண்டுக்கான கலைவாணி விழா மற்றும் வாணி விழா சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வுகள் நேற்று (18) மாலை பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில் பிரதேச செயலாளர் கந்தையா லவநாதன் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றன.

நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன் குழுவினரின் சிறப்பு பஜனையுடன் ஆரம்பமான கலைவாணி விழா நிகழ்வுகளின் சிறப்புப் பூஜைகளை அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் மஹா தேவஸ்தானத்தின் பிரதம குரு சிவஸ்ரீ சிவகீர்த்தி குருக்கள் நடாத்திவைத்தார்.

இக்கலைவாணி விழாவைச் சிறப்பிக்கும்வகையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் வடிவமைக்கப்பட்ட இருபத்தைந்தாவது வாணி விழா சிறப்பு மலரைப் பிரதேச செயலாளர் வெளியிட்டுவைத்தார். அதன் முதல் பிரதியை சிவஸ்ரீ சிவகீர்த்தி குருக்கள் பெற்றுக்கொண்டதுடன் இரண்டாவது பிரதியை ஆலையடிவேம்பு உதவி பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் பெற்றுக்கொண்டிருந்தார்.

குறித்த விழாவின் சிறப்பம்சமாக இடம்பெற்ற கலைநிகழ்வுகளில் தமிழர் பாரம்பரியங்களைப் பறைசாற்றும் செல்வி. யோகேஸ்வரன் யகதாரிணி தலைமையிலான ஸ்ரீ சித்தி விநாயகர் நர்த்தனா சிவாலய மாணவிகள் மற்றும் செல்வி. கைலாசபிள்ளை மாதுரி தலைமையிலான ஜதீஸ்வரா நடனாலய மாணவ மாணவிகள் வழங்கிய குழு நடன நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, அவர்களுக்கான பரிசளிப்பு வைபவமும் பிரதேச செயலாளரின் தலைமையில் இடம்பெற்றிருந்தது.

இவ்விழாவில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் பணிபுரியும் மூவினங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.