மட்டக்களப்பில் சிகரம் தொட்ட மாணவர்கள் மற்றும் சாதனை படைத்த போதனையாளர்கள் ஊக்குவிப்பு



(சிவகுமார்)
தரம் 05 (2018) மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரித்தலுக்கான செயற்திட்டத்தை மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்கம் (EDS) கனடாத் தமிழர் அறக்கட்டளை நிதியத்தின் (CTCT) நிதி அனுசரனையுடன் வடக்கு , கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் முன்னெடுத்தது.


அண்மையில் வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் சகல இடங்களிலும் இத்திட்டம் பாரிய வெற்றியை பெற்றுள்ளது. இதற்கு காரணமான மாணவர்கள் , போதனையாளர்களை பாராட்டி ஊக்குவிக்கும் நிகழ்வு 13.10.2018 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு மட்டக்களப்பு கல்வி அபிவிருத்திச் சங்க சிவநேசராசா மண்டபத்தில் நடைபெற்றது.




கல்வி அபிவிருத்திச் சங்க ஸ்தாபகர் சி. தேவசிங்கன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் பிரதம அதிதியாகவும் மட்டக்களப்பு மாநகரசபையின் கௌரவ முதல்வர் தியாகராஜா சரவணபவன் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.

தலைமையுரையாற்றிய கல்வி அபிவிருத்திச் சங்க ஸ்தாபகர் சி. தேவசிங்கன் அவர்கள் வடக்கு , கிழக்கு மாகாணங்களின் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் அடைவுமட்டம் தொடர்பாக கூறியதில் 2017ம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் பிரகாரம் ஏறத்தாழ இவ்விரு மாகாணங்களிலும் 20,000 மாணவர்கள் ஆரம்பக்கல்வியை திருப்திகரமாக நிறைவேற்றாதவர்களாக உள்ளனர்  என்றும். இது தொடர்பாக எமது சமூகம் மிக அவதானம் செலுத்தவேண்டிய நேரம் இது எனவும் கூறினார்.




நிகழ்வில் அதிதிகள் தமது உரைகளில்

எழுந்தவண்ணம் பணிகளை மேற்கொள்ளாமல் விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்து செயற்படும் ஒரு அமைப்பு கல்வி அபிவிருத்திச் சங்கமே (EDS). போர்க்காலத்திலும் அதன் பின்னரும் மாவட்டத்தின் பின்தங்கிய பகுதிகளிலுள்ள மாணவர்களை பட்டைதீட்டி சிகரம் தொடவைத்தது கல்வி அபிவிருத்திச் சங்கம் என்றும் மேலும் கல்லடி பிரதேச மக்கள் முடியாதது என்பது முட்டாள்களின் அகராதியில் உள்ள வார்த்தை என எண்ணி செயற்படுபவர்கள் என கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து சிறிநேசன் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டார்.



கிளிநொச்சி பிரதேசத்தில் பல அரசசார்பற்ற நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவே பணிபுரிகின்றன. இவர்களின் சேவை A9 வீதியை மையப்படுத்தியே நடைபெறுகிறது. இதற்கு விதிவிலக்காக வடமாகாணத்திலள்ள 35 பிரதேசப் பிரிவுகளில் மிகவும் பின்னடைவான பிரதேசம் பூநகரி பிரதேசப் பிரிவு ஆகும். யாவரும் இந்த பகுதியைக் கண்டுகொள்வதில்லை. இது கிழக்கின் வாகரையை விட மிக பின்னடைவான பிரதேசமாகும். 2017 ஆம் ஆண்டில் EDS அமைப்பு பூநகரி பிரதேசத்தை தத்தெடுத்து ஆரம்பக்கல்வியில் பல முன்னேற்றங்களை உருவாக்கி வருவதை இட்டு நாம் பெருமகிழ்சியடைகின்றோம் என கிளிநொச்சி கல்வி வலயத்தின் ஆரம்பப்பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு. சிற்றம்பலம் கணேசலிங்கம் குறிப்பிட்டார்.



இந்த அரசாங்கத்தின் 2030 , 2050 ஆண்டின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக கிழக்கில் வாழும் தமிழ் சமூகம் மிக விழிப்புடன் செயலாற்ற வேண்டும். இது எமது சமூகத்தில் ஒரு சூறாவளியைத் தோற்றுவிக்கப்போகிறது. இதற்குள் எமது சமூகம் சிக்கிக்கொள்ளாமல் இருந்து அவர்களுக்கு மிகப்பொருத்தமான கல்வியை நாம் ஊட்ட வேண்டும் என மட்டக்களப்பு மாநகரசபையின் கௌரவ முதல்வர்  தியாகராஜா சரவணபவன் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து பிரதேச ரீதியில் சிகரம்தொட்ட 19 மாணவர்களுக்கும் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. இதற்கு காரணமான போதனையாளர்கள் ஒன்பது பேருக்கு ஞாபகார்த்த சின்னமும் வழங்கப்பட்டது. போதனையாளர்களை மேலும் ஊக்குவிக்கும் முகமாக லண்டனில் வதியும் Dr. சதாசிவம் மகேஸ்வரன் அவர்களின் அன்பளிப்பும் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.