கிழக்கு மாகாணத்திலுள்ள 4 பிரதேசங்களில் மிக அதிகான சிறுநீரகத்தாக்கம் - கிழக்கு மாகாண ஆணையாளர்




பைஷல் இஸ்மாயில்


மிக அதிகமாக விவசாயம் செய்யப்படுகின்ற இடங்களில் வாழ்கின்ற மக்கள் சிறு நீரகத்தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும், கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் பதவி ஸ்ரீபுர, வாகரை, மகாஓயா, கோமங்கடவல போன்ற இடங்களில் வாழ்கின்ற மக்களே இத்தாக்கத்துக்கு மிக அதிகமாக ஆளாகியுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுதேச திணைக்கள ஆணையாளர் திருமதி ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சுதேச திணைக்களத்தின் விஷேட நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ஹெல சுவய நிறுவத்தின் ஊடாக ”நஞ்சற்ற பாரம்பரிய உணவு” எனும் தொனிப்பொருளில் மஞ்சந் தொடுவாய் யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஏ.எல்.எம்.ஜலால்தீன் தலைமையில் விம்பில்டன் ஆங்கிலப் பாடசாலை மண்டபத்தில் அன்மையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று மக்களை ஆட்டிப்படைக்கின்ற ஒரு பாரிய உயிர்கொல்லி தொற்றாய் நோயாக சிறுநீரக நோய் காணப்படுகின்றது. இதிலிருந்து எம்மக்களைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் எமது நாட்டின் ஜனாதிபதி அவர்களின் சிந்தனையின் கீழ் ஒரு விஷேட திட்டம் ஒன்று உறுவாக்கப்பட்டு இதனை முன்னெடுக்கும் நோக்கில் பல்துறை சார்ந்த திணைக்களம் மற்றும் நிறுவனத்தினூடாக இத்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இது தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் மிக அண்மையில் இடம்பெற்றதுடன் அதற்கான அறிவுறுத்தல்களும் எங்களுக்கு வழங்கப்பட்டு இதனை முன்னெடுக்கும் நோக்கில் சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு, விவசாய அமைச்சு போன்ற அமைச்சுக்களுடன் அவை சார்ந்த திணைக்களங்கள், நிறுவனங்கள் இணைந்து இத்திட்டத்தை மக்கள் மத்தியில் நடாத்தி பொதுமக்களுக்கான வழிப்புணர்வுகளையும் இந்த உயிர்கொல்லி தொற்றாய் நோய்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் ஆலோசணைகளையும் நடாத்தி மக்களை விழிப்படையச் செய்தும் வருகின்றோம் என்றார்.

இந்நிகழ்வில் மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளரும், வைத்திய நிபுணருமான வைத்தியர் ரீ.சுந்தரேசன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஆயுர்வேத பிராந்திய இணைப்பாளர் வைத்திய அத்தியட்சகர் எம்.ஏ.நபீல், கிழக்கு மாகாண தாதிய தோதனாசிரியர் பீ.தேவரஜனி, கல்வித் திணைக்கள மற்றும் விவசாய திணைக்கள உயர் அதிகாரிகள், அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் கடமையாற்றும் ஆயுர்வேத வைத்தியர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த விழிப்புணர்வின்போது நஞ்சற்ற பாரம்பரிய உணவு தயாரிக்கும் முறையும் ஆயுர்வேத வைத்தியர்களினால் செய்து காண்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.