மழை வீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

வடக்கு, கிழக்கு, வடமேல், ஊவா மற்றும் தென் மாகாணங்களில் நிலவும் மழையுடனான வானிலை இன்று இரவு முதல் அதிகரிக்கக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


ஊவா, மத்திய, தென் மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் 100 முதல் 150 மில்லிமீற்றர் வரை மழை பெய்யக்கூடிய சாத்தியமுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை திருகோணமலை முதல் மட்டக்களப்பு வரை, மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடற்பிராந்தியங்களில் இன்று இரவு முதல் பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை முதல் மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம், மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 வரை காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்க கூடும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.