30 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளிரூட்டும் நிகழ்வு




புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தினால் அமைக்கப்பட்ட 30 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் ஒளிரூட்டும் நிகழ்வு...

புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தினால் கிறிஸ்து பிறப்பு தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட 30 அடி உயரமான கிறிஸ்மஸ் மரம் மற்றும் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பாலன் கூடு என்பவற்றிற்கு ஒளிரூட்டும் நிகழ்வும் பாலன் கூட்டினைத் திறந்து வைக்கும் நிகழ்வும் ரிதம் இளைஞர் கழகத்தின் ஆலோசகரும், மாநகரசபை உறுப்பினருமான அந்தோனி கிருரஜன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதலர்வர் அதிதியாகக் கலந்துகொண்டு அழகான முறையில் வடிவமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்திற்கு ஒளியேற்றி வைத்ததுடன் பாலன் கூட்டினையும் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து புனித மரியாள் பேராலயத்தில் உதவிப் பங்குத் தந்தையும் இதனைப் பார்வையிட்டு ஆசியையும் வழங்கினார்.

இதன்போது பெருமளவான பிரதேச மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

புளியந்தீவு பிரதேசத்தில் முதன் முறையாக இத்தகு உயர கிறிஸ்மஸ் மரம் அலங்கரிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ ஆலயங்கள் ரீதியில் இதனை சிறப்பாக மேற்கொண்டு வருகின்ற போதிலும் கழகங்கள், பொது அமைப்புகள் என்ற அடிப்படையில் ரிதம் இளைஞர் கழகத்தால் மேற்கொள்ளப்பட்ட இவ்விடயத்திற்கு பிரதேச மக்கள் மத்தியில் மிக வரவேற்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.