முதியோர் சிறுவர்களை கௌரவித்துப் பாராட்டிய புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையம்...

.


மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட புளியந்தீவு தெற்கு சனசமூக நிலையம் ஆரம்பிக்கப்பட்டு அதன் கன்னி முயற்சி நிகழ்வாகிய முதியோர் சிறுவர் பாராட்டு விழா நேற்று மாலை மட்டக்களப்பு ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரி மண்டபத்தில் சனசமூக நிலையத்தின் தலைவர் எம்.அருமைத்துரை அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ நடராஜ சந்திரலிங்கக் குருக்கள், புனித மரியாள் பேராலயத்தின் பங்குத் தந்தை அருட்தந்தை சி.வி.அன்னதாஸ் உட்பட பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், விசேட அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகரசபை 18ம் வட்டார உறுப்பினர் அ.கிருரஜன், கிழக்குப் பல்கலைக்கழகப் பிரதி உபவேந்தர் வைத்தியகலாநிதி கே.ஈ.கருணாகரன், சனசமூக நிலையத்தின் ஆலோசகர் ஓய்வுநிலை அதிபர் லூ.அலெக்சாண்டர், கௌரவ அதிதிகளாக சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் அன்பழகன் குரூஸ், ஆனைப்பந்தி இந்து மகளீர் கல்லூரி அதிபர் திருமதி த.உதயகுமார், புளியந்தீவு தெற்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.தவராசா, கிராம சேவை உத்தியோகத்தர் செல்வி தி.தங்கேஸ்வரி உட்பட பாராட்டுப் பெறும் முதியோர் மற்றும் சிறுவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் புளியந்தீவு தெற்கு பிரதேசத்திற்குட்பட்ட 75 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் கௌரவித்துப் பாராட்டப்பட்டதுடன், 2018ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் 100 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களும் பாராட்டி சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் மலரும் மொட்டுக்கள், இருதயபுரம் கலாபம் சமூக நற்பணி மன்றம் ஆகியவற்றினால் கலை நிகழ்வுகளும் நிகழ்த்தப்பட்டன.

மேலும் இதன் விசேட நிகழ்வாக புளியந்தீவு ரிதம் இளைஞர் கழகத்தினால் மாநகர முதல்வர், பிரதி முதல்வர், மாநகரசபை உறுப்பினர் ஆகியோருக்கு பென்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து, மலர்க்கொத்து கொடுத்து கௌரவிக்கும் நிகழ்வு மேற்கொள்ளப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.