ஜனவரியில் அரச நிறுவனங்கள் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டியேற்படும் - ரவிகருணாநாயக்க



அடுத்த வருடத்துக்கான வரவு - செலவுத் திட்டம் இதுவரை சமர்ப்பிக்கப்படாமல் இருப்பதால் ஜனவரி முதல் அரச நிறுவனங்கள் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அதனால் இடைக்கால வரவு செலவு திட்டத்தையேனும் சமர்ப்பித்து நெருக்கடி ஏற்படாமல் தடுப்பதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொதடர்ந்து தெரிவிக்கையில்,

அடுத்த வருட அரச செலவுகளுக்கான நிதியை பாராளுமன்றமே ஒதுக்கவேண்டும். ஆனால் இந்த வருடம் நிறைவடைய இன்னும் சில வாரங்களே இருக்கின்றன. அதில் 16 நாட்களே பாராளுமன்றம் இடம்பெற இருக்கின்றது.

ஆனால் இதுவரை அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்டம் இதுவரை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இவ்வாறான நிலையில் எவ்வாறு அடுத்த வருடத்துக்கு நிதியை ஒதுக்கப்போகின்றோம்.

அத்துடன் எதிர்வரும் 16 நாட்களுக்குள் அடுத்த வருடத்துக்கான நிதி ஒதுக்கீட்டை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனவரி முதல் அரச நிறுவனங்கள் இயங்க முடியாத பாரிய பிரச்சினை ஏற்படும் அபாயம் இருக்கின்றது.

அதனால் எஞ்ஞியிருக்கும் சில தினங்களில் இடைக்கால வரவு செலவு திட்டம் ஒன்றையேனும் சமர்ப்பித்து பாராளுமன்றத்தின் அங்கிகாரத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.