இன்று கூடவுள்ள பாராளுமன்றத்தில் இடம்பெறப்போவது என்ன?




சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ளது.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு ரணில் விக்ரமசிங்கவுக்கு காணப்படுகின்றமையினால், அவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினம் சபையில் நம்பிக்கை பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.

குறித்தப் பிரேரணையினை ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மனோகணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெலஉறுமய ஆகிய கட்சிகள் இணைந்தே மேற்படி நம்பிக்கைப் பிரேரணையை சமர்ப்பிக்கவுள்ளன.

எனினும் இப் பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணியினர் ஆதரவு அளிக்க மாட்டோம் என மறுத்துள்ளதுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு என்ன என்பது குறித்து இன்று காலை இரா.சம்பந்தன் தலைமையில் கூடவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதி அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் மற்றுமொர் பிரேரணையையும் இன்றைய தினம் சபையில் முன் வைக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது.

இதேவேளை கடந்த நவம்பர் மாதம் 14, 15, 16 சபையில் இடம்பெற்ற மோதல் மற்றும் குழப்பகர சம்பவங்கள் குறித்து விசாரிக்க சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நியமிக்கப்பட்ட பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான குழு தமது விசாரணை நகர்வுகளை இன்று முதல் ஆரம்பிக்கவுள்ளது.

இன்றைய தினமும் பொதுமக்கள் கலரி மற்றும் விசேட விருந்தினர் பார்வையாளர் கூடம் ஆகியன மூடப்படுமென பாராளுமன்ற படைக்கல சேவிதர்கள் அறிவித்துள்ளனர்.

எனினும் பாராளுமன்ற கலரியில் ஊடகவியலாளர்களுக்கு செய்தி சேகரிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இன்றைய அமர்வினையும் புறக்கணிக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.