இலங்கை அரசியலில் பரபரப்பு- இன்று மாலை எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம்




ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினதும் பொதுஜனபெரமுனவினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று மாலை முக்கிய சந்திப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ளவுள்ள நிலையில் இலங்கை அரசியலில் மீண்டும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் அதிகரித்துள்ளது.

இதேவேளை இன்றைய சந்திப்பில் நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கை குறித்து ஆராயவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த செவ்வாய்கிழமை ஒரு வார காலத்திற்குள் அரசியல் நெருக்கடிக்கு தீர்வை அறிவிப்பேன் என அறிவித்திருந்த நிலையில் இன்றை சந்திப்பு நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்றம் வர்த்தமானி அறிவித்தலிற்கு எதிராக தீர்ப்பை வழங்கினால் பொதுத்தேர்தல் குறித்த சர்வஜனவாக்கெடுப்பை நடத்துவது குறித்து சிறிசேன ஆராய்ந்து வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே இன்றைய சந்திப்பு இடம்பெறவுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர் எடுக்கவேண்டிய இறுதி நடவடிக்கை குறித்து ஆராய்வதற்காகவே ஜனாதிபதி இன்றைய சந்திப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார் என அவரிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு புதன்கிழமை வெளியாகலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதேவேளை ஜனாதிபதி நேற்று சட்டமா அதிபருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.இந்த சந்திப்பில் ஆராயப்பட்ட விடயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகாத போதிலும் ஜனாதிபதியின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தே ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன