கிழக்கில் பொங்கலை கொண்டாட முடியாத நிலையில் மக்கள் அவதி!
செ.துஜியந்தன்

கிழக்கில் மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தொடர்ச்சியாக பெய்வரும் கடும் மழை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக  தைப்பொங்கலை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட முடியாத நிலைக்குள்ளாகியுள்ளனர். இங்குள்ள தாழ்நிலப்பிரதேசங்களில் வெள்ள நீர்தேங்கியுள்ளது. பல வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.

வெள்ள நீர் தேங்கியுள்ள மக்கள் தங்களுடைய வீடுகளில் இருக்கமுடியாது உறவினர் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த இரு தினங்களாக கடும் மழை பெய்துவருகின்றது.

தைப்பொங்கல் பண்டிகையை வெகுவிமர்சையாக கொண்டா மக்கள் தயாராக இருந்த நிலையிலே கிழக்கில் இம் மழை வெள்ளம் நீடித்துள்ளது. வீட்டு வாசலில் அடுப்பு மூட்டி பொங்கமுடியாதளவிற்கு வெள்ள நீர் தேங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் வீதிகள் பலவும் மக்கள் போக்குவரத்து செய்யமுடியாதளவிற்கு நீர் தேங்கியுள்ளது. வெள்ளத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளவர்களின் பெயர் விபரங்களை திரட்டும் பணியில் பிரதேச அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.