உள நெருக்கீடுகளால் பெருமளவான ஆசிரியர்கள் ஓய்வுபெற முடிவு!




வடக்கு கிழக்கு மாகாண ஆசிரியர்களில் இருபது வருட சேவை நிறைவு செய்த பெரும்பாலானவர்கள் அறுபது வயதிற்கு முன்னரே உள நெருக்கீடுகளால் ஓய்வுபெற முடிவுசெய்துள்ளனர். இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில்…….

வடக்கு கிழக்கு மாகாணங்களின் கல்வி நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாகச் செல்கின்றது. அதற்கான காரணங்கள் பலவற்றை பல தடவைகள் நாம் ஆதாரபூர்வமாக வெளியிட்டோம்.

இதைவிட அதிபர்கள், ஆசிரியர்கள் மீது பல்வேறு நெருக்கீடுகள் பிரயோகிக்கப்படுகின்றன.

குற்றம் செய்யாத அதிபர்கள், ஆசிரியர்கள் நியாயமின்றித் தண்டிக்கப்படுவதும், இடமாற்றம் செய்யப்படுவதும், திருப்தியில்லாமல் விசாரணைகள் நடாத்தப்படுவதும், பக்கசார்பாக தீர்ப்புகள் வழங்கப்படுவதும் ஒருபுறம் இருக்க,மாணவர்களைக் கட்டுப்பாட்டுடன் வழிப்படுத்த முடியாதவர்களாக அதிபர்கள், ஆசிரியர்கள் இருப்பதும், மாணவர்களுக்கு சட்டரீதியிலான அதிகளவு அநாவசிய சுதந்திரமும், சமூகத்தில் புகுந்துள்ள, சமூகத்தையும் சந்ததியையும் அழிக்கின்ற நடைமுறைகளுமே இத்தகைய நிலைக்குக் காரணம்.

இவை அனைத்தும் சட்டத்தாலும், சமூகத்தாலும் மாற்ற அல்லது நிறுத்த முடியாதவை. இவற்றை அதிபர்களும், ஆசிரியர்களும் மாற்றலாம் என்கின்ற நிலை கடந்துவிட்டது.

ஆகையால் அதிபர்களும், ஆசிரியர்களும் சேவையில் இருந்து ஓய்வுபெறுவதைத் தவிர வேறு வழியில்லை என்கின்ற முடிவினாலேயே இத்தகைய பெருமளவான ஆசிரியர்கள் ஓய்வுபெற முடிவுசெய்துள்ளனர்.

மாறாக தவறு செய்கின்ற அதிகாரிகள் தண்டிக்கப்படுவதும் இல்லை. கண்டிக்கப்படுவதும் இல்லை. அவர்களுக்கு பதவி உயர்வுகளே வழங்கப்படுகின்றன. இதைவிட சிலர் ஓய்வின் பின்னரும் பதவியில் தொடர ஆசைப்படுகின்றனர். ஆனால் அதே அதிகாரிகள் அதிபர்களையும், ஆசிரியர்களையும் விசாரணை செய்கின்ற அதிகாரிகளாகவும், தீர்ப்பு வழங்குகின்ற நீதிபதிகளாகவும் நியமனம் செய்யப்படுவது கவலைக்குரிய விடயம் மட்டுமன்றி எமது தலையில் நாமே இடியை இழுத்தெடுக்கின்றோம்.

தவறு செய்யும் அதிகாரிகள் பற்றி முறைப்பாடுகள் செய்தால் அதுபற்றி சிறிதளவும் சிந்திக்காததால் ஆசிரியர்கள் சிலர் மரணமடைந்த சம்பங்களும் நடைபெற்றுள்ளன.

மரணத்தைவிட மௌனமாக அடங்கியிருப்பது அல்லது ஒதுங்கியிருப்பதென அதிபர்களும், ஆசிரியர்களும் முடிவெடுத்திருப்பது அவர்களின் புத்திசாதுரியம் என்பதனைவிட இயலாத்தன்மை என்றே தோன்றுகின்றது. மாணவர்கள் கைகட்டி நின்ற காலம்போய் ஆசிரியர்கள் கைகட்டி நிற்கும் சூழல் இன்று உள்ளது.
ஏற்கனவே வடக்கு கிழக்கு மாகாணங்களில் பாடத்துறைசார்ந்த ஆயிரக்கணக்கான ஆசிரிய வெற்றிடம் உள்ளது. இந்நிலையில் பெருமளவான ஆசிரியர்கள் ஓய்வுபெற்றால் இன்னும் நிலைமை மோசமாகும் என சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.