அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழ், கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்களின் பட்டியலை நலன்புரி நன்மைகள் சபை வௌியிட்டுள்ளது.
தொடர்புடைய பட்டியல் அனைத்து பிரதேச செயலக அலுவலகங்களின் அறிவிப்பு பலகைகளிலும், கிராம உத்தியோகத்தர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அதிகாரிகளின் காரியாலய அறிவிப்பு பலகைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பட்டியல் நலன்புரி நன்மைகள் சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் (www.wbb.gov.lk) வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் சேகரிப்பின் இரண்டாம் கட்டத்தின் போது வழங்கப்பட்ட தகவல்களில் பிழை அல்லது முரண்பாடு இருப்பதாக கருதும் விண்ணப்பதாரர்கள் மற்றும் கொடுப்பனவுகளைப் பெற தகுதியான பட்டியலில் பெயர் உள்ளடக்கப்படாத நபர்கள் ஆகியோர் இதற்கான மேல்முறையீட்டைச் சமர்ப்பிக்கலாம்.
அஸ்வேசும இரண்டாம் கட்டத்திற்கான ஆரம்ப விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டாலும், வீட்டு விபரத் தகவல்களைச் சேகரிக்க அரசாங்க கள அதிகாரி ஒருவர் குறித்த வீட்டிற்குச் செல்லவில்லை என்றால், அத்தகைய விண்ணப்பதாரர்களும் மேல்முறையீட்டை சமர்ப்பிக்கலாம்.
மேல்முறையீடு செய்வதற்கு முன், அனைத்து மேல்முறையீட்டாளர்களும் வீட்டுவசதி தகவல் சேகரிப்பின் போது IWMS தரவுத்தளத்தில் தங்கள் குடும்பத்தைப் பற்றி வழங்கப்பட்ட தகவல்களை பார்வையிட வேண்டும்.
மேல்முறையீட்டாளர்கள்/ ஆட்சேபனையாளர்கள் www.wbb.gov.lk என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு பிரவேசித்து, பின்னர் தங்களது மேல்முறையீடுகள்/ ஆட்சேபனைகளை இணையவழியாகவும் சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை இணையவழியாக சமர்ப்பிக்கும்போது தங்கள் பகுதியில் உள்ள விதாதா வள மையங்களின் (Vidatha Resource Centres) உதவியையும் பெறலாம்.