விடுதலைப் புலிகள் இருவருக்கு 185 வருட கடூழியச் சிறை

பாதுகாப்புத் தரப்பினர் பயணித்த அன்டனோவ் 32 ரக பயணிகள் விமானம் மீது, ஏவுகணைத் தாக்குதல் நடத்தி, அதில் பயணித்த 32 படையினரைக் கொலை செய்தார்கள் என்ற குற்றத்துக்காக, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஏவுகணைப் பிரிவு முக்கியஸ்தர்கள் இருவருக்கு, ஐந்து வருடங்கள் அனுபவிக்கும் வகையில், 185 வருடகால கடூழியச் சிறைத் தண்டனை விதித்து, அநுராதபுரம் மேல் நீதிமன்ற நீதிபதி மஹேஸ் வீரமன், நேற்று (10) தீர்ப்பு வழங்கினார்.

கடந்த 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30ஆம் திகதி இடம்பெற்ற இந்தத் தாக்குதலானது, பலாலி விமான நிலையத்திலிருந்து இரத்மலானையிலுள்ள விமானப் படைக்குச் சொந்தமான விமான நிலையத்தை நோக்கி, படையினரை ஏற்றிக்கொண்டுப் பயணித்த விமானம் மீதே, வில்பத்து சரணாலயப் பகுதியில் வைத்து, இந்த ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

இது தொடர்பில், மேற்படி இருவரும், கடந்த 2010ஆம் ஆண்டில், பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால், ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட ஸ்டெல்லா ரக ஏவுகணைத் தாக்கி மற்றும் அதற்குப் பொருத்தப்படும் ஸ்டெல்லா ரக ஏவுக​ணைகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கு, அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், மேற்படி இருவரும், தமது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, நேற்றைய தினம், தீர்ப்பு வழங்கப்பட்டது.

மேற்படி குற்றவாளிகள் இருவரும், சுமார் 8 வருடகாலம், தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்தக் காலப்பகுதியையும் கருத்திற்கொண்டே, அவர்கள் இருவருக்கும், ஐந்து வருடங்கள் மாத்திரமே அனுபவிக்கக்கூடிய வகையில், 185 வருடகால கடூழியச் சிறைத் தண்டனையை விதிப்பதாக, நீதிபதி தீர்ப்பளித்தார்.