தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழகத்தின் 4வது பிறீமியர் லீக் கிறிக்கெட் சுற்றுப்போட்டி



தாழங்குடா ஸீப்ரா விளையாட்டுக் கழகத்தின் 4வது பிறீமியர் லீக் கிறிக்கெட் சுற்றுப்போட்டி நிகழ்வுகள் கழகத் தலைவர் நிரஞ்சன் தலைமையில் 02.02.2019 சனிக்கிழமையன்று ஆரம்பமாகி இதன் அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றுக்கள் 09.02.2019 சனிக்கிழமை நடைபெற்றது.

கிராமத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து கிறிக்கெட் வீரர்களும் ஒன்றிணைந்து Batti Boys, Z. Lion, Green Guys, Golden Flower, Kennedy  என ஐந்து அணிகளாகப் பிரிந்து பலப்பரீட்சை நடத்தினர். இதில் இறுதிச்சுற்றுக்குத் தெரிவான  Batti Boys, Z. Lion ஆகிய இரு அணிகளில்  Batti Boys அணி வெற்றிவாகையைச்  சூடிக்கொண்டது.

இடம்பெற்ற போட்டிகளின் அடிப்படையில் சிறந்த பந்துவீச்சாளராக சுதா அவர்களும், சிறந்த துடுப்பாட்ட வீரராக லோ.ஜெகன் அவர்களும், ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகனாக பூ.முகுந்தன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

இந் நிகழ்வின் முக்கிய அம்சமாக இம்முறை தாழங்குடா கிராமத்திலிருந்து பல்கலைக்கழத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். வைத்தியத் துறைக்குத் தெரிவான S.மிதுசிகா, பௌதிக விஞ்ஞானப் பிரிவுக்குத் தெரிவான K.இந்து, கலைப்பிரிவுக்குத் தெரிவான S.ரதீபா மற்றும் A.மிலுக்சா ஆகிய மாணவர்கள் அதிதிகளால் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்னர்.

ஸீப்ரா விளையாட்டுக் கழகமானது விளையாட்டுடன் மட்டும் நின்றுவிடாது வருடம் தோறும் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகும் மாணவர்களை கௌரவப்படுத்தி வருகின்றது. தாழங்குடா கிராமத்தின் சாதனையாளர்களை சமூகத்தின் மத்தியில் அடையாளப்படுத்தவும், அவர்கள் தாண்டிவந்த தடைகளை வெளிக்கொணரவும் அதன் மூலம் எதிர்காலச் சமூகத்தினை சிறந்த பாதைக்கு வழிப்படுத்தவும் இக் கௌரவங்களை தவறாது மாணவர்களுக்கு வழங்கி வருகின்றது.

நிகழ்வின் அதிதிகளாக பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் அ.சிவகுமார், மண்முனைப் பிரதேச சபை உறுப்பினர் ஆ.சிவலிங்கம், தாழங்குடா ஸ்ரீ வீரமா காளியம்மன் ஆலயத் தலைவர் ந.துவாகரன், சமுர்த்தி உத்தியோகத்தர் மா.நமசிவாயம், ஆசிரியர் க.இளங்கீரன், உலகநாச்சி கலைக்கழகத் தலைவர் க.தேவராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிறீமியர் லீக் சுற்றுப் போட்டிக்கு  கோபால் மோட்டார் சேவிஸ் (பிரதான வீதி, தாழங்குடா), பௌசீஸ் (மட்டக்களப்பு), L.E மோட்டார் காட்சியறை (பிரதான வீதி, புதுக்குடியிருப்பு) ஆகியோர் அனுசரணை வழங்கினர். ஊடக அனுசரணை Battinews