களனிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தினால் தட்டுமுனை மாணிக்க விநாயகர் வித்தியாலயத்தில் நூலகத் திறப்பு விழா

வ.யதுர்ஷன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா வலயத்திற்குட்பட்ட மட்/க.கு/தட்டுமுனை மாணிக்க விநாயகர் வித்தியாலயத்தில் களனிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தினால் நூலகத் திறப்பு விழா வித்தியாலய அதிபர் சி.கமலநாதன் ஐயா தலைமையில் இன்று(20.02.2019) மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

விழாவில் களனிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத் தலைவர் த.வைகுந்தன், பொருளாளர் யோ.கனிஸ்டன், உறுப்பினர்களான வ.யதுர்ஷன் மற்றும் பி.மிதுர்ஷன், வித்தியாலய அபிவிருத்தி சங்க செயலாளர், தட்டுமுனை சனசமுக நிலைய செயலாளர், பழைய மாணவர்கள், அமைப்புகளின் உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.

களனிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தினால் கட்டிக் கொடுக்கப்பட்ட நூலகம் அமைப்பின் தலைவர் த.வைகுந்தன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டதுடன் குறித்த எண்ணிக்கையிலான புத்தகங்களும் வழங்கி வைக்கப்பட்டன. விழாவில் களனிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத் தலைவர் த.வைகுந்தன் வித்தியாலய அதிபர் சி.கமலநாதன் ஐயாவினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது.

 வாகரைப் பிரதேசத்தில் அமைந்துள்ள இப் பாடசாலை யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட பாடசாலை என்பதுடன் தரம் 8 வரை 202 மாணவர்கள் கல்வி கற்கின்ற நிலையில் 4 ஆசிரியர்களே கற்பிக்கின்றனர். 

களனிப் பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தினால் வருடாந்தம் மதுகை எனும் விழாவும் சாரல் புத்தக வெளியீடும் இடம்பெறுவதுடன் இதன் மூலம் கிடைக்கும் பணத்தின் மூலம் அதிகஸ்டப் பிரதேசத்திலுள்ள ஒரு பாடசாலை தெரிவு செய்யப்பட்டு அப் பாடசாலையில் அடிப்படைத் தேவை ஒன்றை நிவர்த்தி செய்யும் வகையில் செயற்றிட்டமொன்றை செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த வருடங்களில், முல்லைத்தீவு இருட்டுமடு மகா வித்தியாலயத்திற்கு குழாய் நீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது, பேரகலச பதுளையில் அமைந்துள்ள விபுலானந்த தமிழ் மகா வித்தியாலயத்திற்கு நூலகம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. இம்முறை மட்/க.கு/தட்டுமுனை மாணிக்க விநாயகர் வித்தியாலத்திற்கு நூலகம் அமைத்துக் கொடுத்து அமைப்பின் மூன்றாவது செயற்றிட்டத்தைச் சிறப்பாகச் செய்து முடித்துள்ளனர். களனிப் பல்கலைக்கழகத்தில் 200ற்கும் குறைவான தமிழ் மாணவர்களே கல்வி கற்கும் நிலையில் இக் குறைந்த எண்ணிக்கையான அங்கத்தவர்களைக் கொண்டு இவ்வாறான செயற்றிட்டங்களைச் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.